சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே தனியார் பஸ்-லாரி நேருக்கு நேர் மோதி
சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே தனியார் பஸ்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் படுகாயமடைந்தனர். சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகேயுள்ள மேட்டுப்பட்டி தாதனூர் தேவாங்கர் காலனி பகுதியில் இன்று காலை 7:30 மணியளவில், தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் இருந்து சேலம் நோக்கி தனியார் பஸ் ஏராளமான பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது.
எதிரே ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த லாரியின் பின்னால் வந்த மற்றொரு லாரி முந்திச்செல்ல முயன்றபோது, எதிரே வந்த தனியார் பஸ் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் தனியார் பஸ், லாரி பலத்த சேதமானது. இடிபாடுகளுக்குள் சிக்கி லாரி டிரைவர் மற்றும் பஸ் பயணிகள் என 11 பேர் காயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தகவல் அறிந்த காரிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போக்கு வரத்தை சீர்செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்