விராலிமலை அருகே 40 ஆண்டுகளாக இருளில் மூழ்கிய குடியிருப்புகளுக்கு ஒளியேற்றிய விடியல் அரசு
விராலிமலை அருகே கடந்த 40 வருடமாக இருளில் மூழ்கிக்கிடந்த குடியிருப்புகளுக்கு ஒளியேற்றி விடியல் தந்த தமிழக அரசுக்கு நீர் ததும்பிய விழிகளுடன் குடியிருப்புவாசிகள் நன்றி தெரிவித்தனர். மாணவர்கள் மின்னொனியில் பாடங்கள் படிப்பதாக பெருமிதம் அடைந்தனர்.புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை எம்ஜிஆர் நகர் அடுத்துள்ளது பாறைகள் சூழ்ந்த குடியிருப்பு பகுதி புறம்போக்கு நிலம் என்பதால் வசிப்பிடங்களுக்குரிய பட்டா இன்னும் வழங்கப்படவில்லை. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அங்குள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் சிறியவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் என 150க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
பகல் முழுவதும் சூரியன் தரும் ஒளியில் வாழ்ந்து வந்த அவர்கள் இரவு நெருங்கிவிட்டால் இருளில் மூழ்கி விடுவார்கள். கடந்த காலங்களில் மண்ணெண்ணய் விளக்குடன் இரவு பொழுதை கழித்து வந்த இவர்கள் தற்போது வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சியால் டார்ச் லைட், கைப்பேசி டார்ச் வெளிச்சத்துடன் இரவு பொழுதை கழித்து வந்தனர். இருப்பினும் அந்த செல்போனுக்கு சார்ஜ் போடுவதற்கு கூட அடுத்த வீதியில் இருக்கும் குடியிருப்பு வாசிகள் உதவியை நம்பும் சூழல் இருந்து வந்துள்ளது. இது பல நேரங்களில் அவர்களுக்கு அவமானங்களை தேடி தந்துள்ளதாக வேதனையுடன் கூறுகிறார் கல்லூரி மாணவி புவனேஸ்வரி.