நிதி அமைச்சகம் தகவல்
வரும் மாதங்களில் உணவு பணவீக்கம் குறையும்.. நிதி அமைச்சகம் தகவல்
இந்தியாவில் வரும் மாதங்களில் உணவு பணவீக்கம் குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பருவமழை காரணமாக நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்து இருப்பதால், நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளதே இதற்காக காரணமாக கூறப்படுகிறது. தென்மேற்கு பருவமழை சீராக இருந்ததால் கோடையில் விதிக்கப்பட்ட பயிர்களின் விளைச்சலை அதிகப்படுத்தி இருக்கிறது. நீர்த்தேக்கம் அதிகரித்து இருப்பதால் தற்போதைய காரிஃப் மற்றும் வரவிருக்கும் ராபி பயிர் உற்பத்திக்கு நல்ல விளைச்சலை கொடுக்கும். இதன் காரணமாக வரும் மாதங்களில் உணவு பணவீக்கம் குறைய தொடங்கும் என்று இந்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்ட பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் சில்லறை பணவீக்கம் கடந்த ஜூலையில், ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.4 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதற்கு உணவு பொருட்களின் விலை முந்தைய உச்சத்தில் இருந்து குறைந்தது தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. சில்லறை பணவீக்கத்தில் கிட்டத்தட்ட பாதி பங்கு வகிக்கும் உணவு பணவீக்கம் ஜூன் மாதத்தில் 9.36 சதவீதமாகவும், ஜூலையில் 5.42 சதவீதமாகவும் குறைந்துள்ளது. சர்வதேச அளவில் தேவை அதிகரித்து இருப்பது இந்தியாவின் ஏற்றுமதியை ஊக்குவித்துள்ளது. எனினும், இறக்குமதியும் அதிகரித்து இருக்கிறது.