சிசிடிவி கேமராக்கள் பொருத்த சென்னை மாநகராட்சி
சென்னையில் உள்ள 245 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த சென்னை மாநகராட்சி ரூ.6.5 கோடி டெண்டர் கோரியுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கற்றலுக்கு ஏற்ற மேம்பட்ட சூழலில் மாணவர்களுக்கான பாதுகாப்பு சூழலை உருவாக்கக்கூடிய நோக்கத்திலும் பள்ளி வளாகத்தில் முழுமையாக சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கு சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. இது தொடர்பாக நிதிநிலை அறிக்கை அறிவிப்பும் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 245 பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்காக ரூ.6.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பிட்ட 245 பள்ளிகளிலும் உயர்தர சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்கும் வகையில் குறிப்பிட்ட பணிகளுக்காக டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த டெண்டரில் பங்கேற்க விரும்புவர்கள் வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் விண்ணப்பித்த பின்னர் 30ம் தேதி டெண்டர் பிறப்பிக்கப்பட்டு பணி ஆணை வழங்கப்படும். பின்னர் அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தக்கூடிய பணிகளில் அடுத்த 2 மாதத்திற்குள் முடிப்பதற்கும் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மாணவர்களுக்கு எந்த ஒரு சிரமமும் இன்றி சுமுக தீர்வுகளை ஏற்படுத்தவும், மாணவர்களுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் பள்ளிக்கூட வளாகத்தை கண்காணிப்புக்கு கீழ் கொண்டுவரக்கூடிய வகையிலும் சென்னை மாநகராட்சி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.