பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் டேபிள் டென்னிஸ் பிரிவில்
பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்திய வீராங்கனைகளான மனிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா மற்றும் அர்ச்சனா காமத் ஆகிய மூவரும் கவனம் ஈர்த்தனர். இதில் 24 வயதாகும் அர்ச்சனா காமத் டேபிள் டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அர்ச்சனா காமத் அவரின் பயிற்சியாளர் கார்க் உடன் நீண்ட ஆலோசனையும் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவில் மேற்படிப்பை தொடர்வதற்காக இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளை பொறுத்தவரை அரையிறுதிக்கு முன்னேறினால் மட்டுமே பொருளாதார ரீதியாக உதவிகள் கிடைக்கும்.
இந்தியாவில் ஸ்பான்சர்ஷிப் கிடைத்தாலும், அர்ச்சனா காமத் படிப்பை தொடர்வதில் உறுதியாக இருக்கிறார். இதுகுறித்து அர்ச்சனா காமத் கூறுகையில், ‘‘எனது சகோதரர் நாசாவில் பணியாற்றி வருகிறார். அவர் தான் எனது ரோல் மாடல். படிப்பை தொடரப் போகிறேன் என்று கூறிய போதும் அவர் தான் எனக்கு ஆதரவாக இருந்தார். எனவே படிப்பை நல்லபடியாக முடிக்க விரும்புகிறேன்’’ என்று அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பொருளாதார தொடர்புடைய படிப்பை அர்ச்சனா காமத் படிக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், வளர்ந்து வரும் வீரர்களுக்கு டேபிள் டென்னிஸில் பெரிய ஆதரவு கிடைக்கவில்லை என்று அவரின் பயிற்சியாளர் கார்க் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது