மின்சார கம்பி உரசியதால் அரசு பேருந்து ஓட்டுனர்
கோத்தகிரி அருகே கூட்டாடா பகுதியில் இன்று அதிகாலை அரசு பேருந்தின் மீது மின்சார கம்பி உரசியதால் அரசு பேருந்து ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சோலூர்மட்டம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கூட்டாடா கிராமத்திலிருந்து இன்று அதிகாலை வழக்கமாக அரசு பேருந்து கோத்தகிரி நோக்கி ஓட்டுனர் பிரதீப் வயது (40) இயக்கி சென்றுள்ளார்.
அப்போது கோவில்மட்டம் அருகே அரசு பேருந்து செல்லும் போது சாலையில் தாழ்வான நிலையில் இருந்த மின் கம்பிகள் மீது பேருந்து உரசியதில் ஓட்டுநர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அறிந்த நடத்துனர் உடனடியாக காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மின் இணைப்பை துண்டித்து ஓட்டுனரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் மின்கம்பிகள் தாழ்வாக இருந்த நிலையில், அதிகாலை நேரத்தில் இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது. அப்போது பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. அரசு பேருந்து மீது மின்சாரம் தாக்கி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.