வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு போல முல்லைப் பெரியாறு அணைக்கு அருகேயும் நிலச்சரிவு ஏற்பட்டால் அந்த அணை உடையும் அபாயம் இருப்பதாக கூறி கேரளாவில் பல்வேறு அமைப்புகள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
அணை உடையப் போவதாக சமூக வலைதளங்களிலும் வதந்திகள் பரவுகின்றன. மேலும் புதிய அணை கட்ட வேண்டும் என்று கூறி இடுக்கி மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று இடுக்கியில் கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் இடுக்கி மாவட்ட கலெக்டர் மற்றும் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன்பின் அமைச்சர் ரோஷி அகஸ்டின் கூறியது: முல்லைப் பெரியாறு அணைக்கு தற்போதைக்கு எந்த ஆபத்தும் கிடையாது. யாரும் பயப்பட வேண்டிய தேவை இல்லை. அணை ஆபத்தில் இருப்பதாகவும், உடையப்போவதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. இது தவறாகும். அணைக்கு தற்போதைக்கு ஆபத்து இல்லை என்றாலும் புதிய அணை என்ற முடிவிலிருந்து கேரளா பின்வாங்காது என்றார்.