பற்கள் பராமரிப்பு முறைகள்
- ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி’ என்ற பழமொழியும் `ஆலப் போல் வேலப் போல், ஆலம் விழுதைப் போல்’ என்ற கவிஞர் வாலியின் வரிகளும், ஆலம் விழுது மற்றும் கருவேல மர குச்சிகளின் மகத்துவத்தை நமக்கு உணர்த்துகின்றன.
- ‘வேலுக்குப் பல்லிறுகும் வேம்புக்கு பல் துலங்கும் நாயுருவி கண்டால் வசீகரமாங் காண்’ எனும் பதார்த்த குண சிந்தாமணி பாடல், வேல மரக் குச்சிகளில் பல் துலக்க, பற்கள் உறுதியாகிக் கல்லுக்கு நிகராகத் திடமாகும் எனவும், வேப்பங் குச்சிகளில் பல் துலக்க பற்கள் தூய்மையாகும் எனவும், பச்சை நாயுருவி வேரால் பல் அழுக்குகள் நீங்கி பற்கள் அழகாகும் என்றும் வலியுறுத்துகிறது.
- பல் துலக்குவதற்கு மேற்குறிப்பிட்ட குச்சிகள் மட்டுமின்றி மா, தேக்கு, மருது, நாவல், விளா, நொச்சி, புங்கை மர குச்சிகளைப் பயன்படுத்தலாம் என்று மருத்துவ நூல்கள் கூறுகின்றன.
சுவையும் பலனும்
துவர்ப்பு சுவையுள்ள குச்சிகளால், ஈறுகளில் ஏற்படும் புண்கள், ஈறுகளிலிருந்து ரத்தம் வடிதல் போன்றவை குணமடைந்து ஈறுகள் பலமடையும். பற்களும் பிரகாசமாகக் காட்சி அளிக்கும். கசப்பு சுவையுள்ள குச்சிகளால் பற்களில் குடியேறியுள்ள கிருமிகளின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு, பற்கள் ஆரோக்கியமாகவும் தூய்மையாகவும் இருக்கும்.