ஒன்றிய அரசு அறிவிப்பு

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க விதியில்லை : காங்கிரஸ் அரசின் விளக்கத்தை மேற்கோள்காட்டி ஒன்றிய அரசு அறிவிப்பு

வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்த நிலையில், இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. கேரள மாநிலம், வயநாடு பகுதியில் பெருமழை காரணமாக கடந்த 30-ம் தேதி அதிகாலை நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதன்காரணமாக முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 11-வது நாளாக நேற்று மீட்புப் பணி நடைபெற்றது. இதுவரை 427 பேர் உயிரிழந்துள்ளனர். 273 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 138 பேரை காணவில்லை.இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வயநாடு செல்கிறார். இதனிடையே வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

அதே போன்று பிரதமர் மோடி பேரழிவின் தீவிரத்தை நேரில் பார்வையிட்ட பின்னர், அதை தேசிய பேரிடராக அறிவிப்பார் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடரை, தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது கடந்த 2013ம் ஆண்டு அப்போதை பிரதமர் மன்மோகன் சிங், இயற்கை பேரிடரை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என விளக்கமளித்திருந்தார். இந்த விளக்கத்தை மேற்கோள்காட்டி, தற்போது வயநாடு நிலச்சரிவையும் இயற்கை பேரிடராக அறிவிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க விதியில்லை என்றும் தேசிய பேரிடராக அறிவிக்க விதியில்லை என 2013ல் மன்மோகன் அரசே தெளிவுபடுத்தியது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.