மருத்துவமனை கட்டும் பணிகள்
ரூ.377.83 கோடி மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மருத்துவமனை கட்டும் பணிகள்
மக்கள் நல்வாழ்த்துறை மூலம் நீலகிரி மாவட்டத்தில் ரூ.377.83 கோடி மதிப்பில் பல்வேறு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது என மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் தெரிவித்தார். ஊட்டியில் நடந்த பூர்வ குடிகள் தின விழாவில் கலந்துக் கொண்ட மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
ஊட்டியில் 15 ஏக்கர் பரப்பளவில் ரூ.461.18 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நிர்வாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.
இக்கட்டிடம் அனைத்தும் மலைப்பகுதி பாதுகாப்பு ஆணைய விதிகளுக்குகேற்ப தரைத்தளம் மற்றும் முதல் தளம் மட்டுமே கொண்டதாக வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டு வருகின்றன. கல்லூரி முதல்வர் குடியிருப்பு ஆகிய கட்டிடப்பணிகள் முடிவுற்றுள்ளன.
தடுப்புசுவர், வடிகால் மற்றும் அணுகுசாலை உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. குடிநீர் இணைப்பு பெறுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தமிழ்நாடு குடிநீர் வாரியம் மூலமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. அதிக மழைப்பொழிவு மற்றும் இயற்கை சீற்றங்கள் காரணமாக பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவர்கள் சேர்க்கைக்கான புதிய கட்டிடம், குடியிருப்பு கட்டிடம், கூடலூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, கண் அறுவை சிகிச்சை பிரிவு, மகப்பேறு சிகிச்சை பிரிவு கட்டிடங்கள், கோத்தகிரி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடங்கள், பந்தலூர் அரசு மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, சமையலறை மற்றும் சலவையகம், குன்னூர் அரசு மருத்துவமனையில், பொது சுகாதார ஆய்வக கட்டிடம், குன்னூர் அரசு மருத்துவமனையில் புதிய பிணவறை கட்டிடம், எமரால்டு அரசு மருத்துவமனையில், பாதுகாப்புசுவர், ஆம்புலன்ஸ் ஷெட், மற்றும் நோயாளர் உடனாள் தங்கும் அறை ஆகியவை கட்டப்பட்டு வருகிறது.