குறைவான பணத்திலும் நிறைவான தீபாவளி
பண்டிகைக் கொண்டாட மக்கள் கடன் வாங்கவும் தயங்குவதில்லை. ‘வருஷம் முழுக்க காத்துக் கொண்டிருந்த பண்டிகைக்கு கடன் வாங்கி செலவு செய்வதில் தப்பே இல்லை’ என்பது மக்களின் மனநிலை. ஆனால் இதுதான் பிறகு அவர்களை பல சிக்கல்களில் கொண்டு போய் விட்டுவிடுகிறது. தீபாவளிக்கு முன்பு வீட்டைச் சுத்தப்படுத்தி வர்ணம் பூசுவது. லட்சுமி பூஜைக்கு புதிய பாத்திரங்கள் வாங்குவது போன்றவை மங்களகராகக் கருதப்படுகிறது. குழந்தை களுக்கு பட்டாசுகள், இனிப்புகள் வாங்க வேண்டும். அதோடு புது துணிமணிகள், வீட்டுக்கு வரும் விருந்தினரைக் கவனிக்கும் செலவு என்று பணத்தேவை அதிகமாகவே இருக்கும்.
அதனால்தான் மக்கள் பண்டிகைக் காலத்தின்போது கடன் வாங்க அஞ்சுவதில்லை. ஆனால் குறைவான பணத்திலும் நிறைவாக தீபாவளியைக் கொண்டாட முடியும் என்பது பல பேருக்கு தெரிவதேயில்லை.!
சிக்கனமா கொண்டாடுங்க!
- வீட்டுக்கு வண்ணம் பூசுவதற்கு முன்பு, நீங்களே வீட்டைச் சுத்தப்படுத்தலாம். இதனால் வேலையாள் கூலி குறையும்.
- பணப்பற்றாக்குறை அதிகமாக இருந்தால், வண்ணம் பூசாமல் வீட்டைச் சுத்தப்படுத்தி அழகாக்கலாம்.
- பண்டிகைக்கு புதுத் துணி போட்டே ஆக வேண்டும் என்று கட்டாயம் இல்லையே? நன்கு துவைத்து இஸ்திரி போட்ட ஆடைகளை அணிந்தும் தீபாவளியைக் கொண்டாடலாம்.
- வீட்டிலேயே சுவையான, சுகாதாரமான பலகாரங்களைச் செய்தால் இனிப்புச் செலவு குறையும், கலப்படத்தில் இருந்தும் தப்பிக்கலாம்.
- ஒரு சிலர் தீபாவளி என்றால் மது விருந்தில் கலந்து கொள்வர். ஆனால் இது அனாவசிய செலவு மட்டு மல்லாது. உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கும் தீய பழக்கத்துக்கு வழிகாட்டி விடும்.
- தீபாவளி பட்டாசுதான் முதல் செலவு. அதற்காக பட்டாசு வாங்க காசை கரியாக்காதீர். அதோடு இப்போது பட்டாசுகளின் விலை ராக்கெட் ரேஞ்சுக்கு மாறிவிட்டது. ஆகவே குழந்தைகளுக்குத் தேவையான ஒரு சில பட்டாசுகள் மட்டும் வாங்கிக் கொடுத்து அவர்களுக்கு சில பட்டாசுகளால் ஏற்படும் ஆபத்தைப் பற்றி விளக்கலாம்.
- பட்டாசுகள் என்பது காற்று மற்றும் ஒலியை மாசுபடுத்தும் சமாச்சாரம். ஆகவே குழந்தைகளிடம் பட்டாசுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.
- குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது நீங்கள் அருகே இருப்பது தேவையற்ற ஆபத்தைத் தவிர்க்க உதவும்.
- மாடி மற்றும் திறந்த மைதானங்களில் தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக தேவைக்கு உதவ, குளிர்ந்த தண்ணீரை தயாராக வைத்திருக்க வேண்டும். தீக்காயங்கள் பட்டால் பர்னால், வீகோ டர்மரிக் என்று ஆன்ட்டி ஸெப்டிக் க்ரீமும் கைவசம் வைத்திருக்க வேண்டும். அதிக தீக்காயம் பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது அவசியம். இந்த குறிப்புகளை கவனமாக பின்பற்றினால் உங்களது எதிர்கால தீபாவளிகள் பாதுகாப்பாக, நினைவில் நிற்கும்படி அமைவது உறுதி!
- க.வைரமணி