தூத்துக்குடியில் பனிமய மாதா திருவிழா
பிரசித்தி பெற்ற தூய பனிமயமாதா பேராலயத்தின் 442வது ஆண்டு திருவிழா கடந்த 26ம் தேதி தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு திருப்பலியுடன் பேராலயம் முன்பு உள்ள அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட கொடி மரத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. பின்னர் முன்னாள் பங்கு தந்தை குமார் ராஜா தலைமையில் பனிமய அன்னைக்கு பொன்மகுடம் அணிவிக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. திருவிழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தூய பனிமய மாதா பேராலய தேர்பவனி இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக் குடி மாநகர பகுதிகள் ஒளி விளக்குகளால் அலங் கரிக்கப்பட்டு, பொருட் காட்சிகள் அமைக்கப்பட்டு, வரவேற்பு பதாகைகளுடன், விழாக்கோலம் பூண்டுள்ளது. திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 4.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.30 மணிக்கு 2-ம் திருப்பலியும், 7.30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பேராலய பங்குத் தந்தை ஸ்டார்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்ட பெருவிழா கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து 9 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட மக்களுக்காக மாவட்ட முதன்மை குரு ரவி பாலன் தலைமையிலும், 10 மணிக்கு முன்னாள் பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் உபகாரிகளுக்காக திருப்பலியும், நண்பகல் 12 மணிக்கு சிறப்பு நன்றித் திருப்பலி நகரின் அனைத்து மண்ணின் மைந்தர் குருக்கள் துறவியர், அருட் சகோதர சகோதரிகளுக்காக நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் பெருவிழா நிறைவு திருப்பலி நடைபெறுகிறது. இதன் பின்னர் இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் பனிமய மாதா அன்னையின் திருஉருவ பவனி நடைபெறுகிறது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அன்னை எழுந்தருளி மாநகர வீதிகள் வழியாக பவனி வருவார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர பகுதிகள் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பொருட்காட்சிகள் அமைக்கப்பட்டு, வரவேற்பு பதாகைகளுடன், விழாக்கோலம் பூண்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.