3 கொடூரன்கள் கைது
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமிக்கு பள்ளி விடுதியில் பிரசவம்:
காதல் வலைவீசி 16 வயது சிறுமியை வாலிபர் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், சிறுமியை மிரட்டி 2 வாலிபர்கள் அடிக்கடி பலாத்காரம் செய்துள்ளனர். இதில் கர்ப்பிணியான சிறுமிக்கு பள்ளி விடுதியில் குழந்தை பிறந்து இறந்தது. இதுதொடர்பாக 3 கொடூரன்களையும் போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உண்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் அதே மாவட்டத்தை சேர்ந்த 16 வயது மாணவி இன்டர் மீடியட் முதலாம் ஆண்டு வகுப்பில் (பிளஸ்1) கடந்த ஜூன் 19ம்தேதி சேர்ந்தார்.
விடுதியில் சேர்ந்தது முதல் மாணவி சோர்வாக இருந்துள்ளார். கடந்த 1ம் தேதி காலை 11 மணியளவில் பள்ளியில் உள்ள குளியல் அறைக்கு சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் ஆசிரியைகள் குளியலறைக்கு சென்று பார்த்தனர். அப்போது மாணவிக்கு குழந்தை இறந்த நிலையில் பிறந்திருந்ததும், அது ஒரு அட்டை பெட்டியில் வைக்கப்பட்டிருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மாணவி அங்கேயே மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். இதையடுத்து அவரை மீட்டு விடுதி அதிகாரிகள் உதவியுடன் ஓங்கோல் ரிம்ஸ் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இறந்த குழந்தையின் சடலத்தை மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.