உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்து வருகிறது. இதில் முதல் நாளில் பேட்மிண்டன், ஹாக்கி உள்ளிட்ட போட்டிகளில் களம் இறங்கிய இந்திய வீரர்கள் வெற்றிபெற்றனர். இந்திய நேரப்படி நேற்றிரவு 12 மணிக்கு நடந்த மகளிர் குத்துச்சண்டை 54 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் 20 வயதான பிரீத்தி பவார், வியட்நாமின் வோ தி கிம்ஆனுடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரீத்தி பவார், 5-0 என்ற புள்ளிகணக்கில் வெற்றிபெற்று கால்இறுதிக்கு முந்தைய ரவுன்ட் 16 சுற்றுக்குள் நுழைந்தார். ஆசிய விளையாட்டில் வெண்கலப்பதக்கம் வென்ற அரியானாவைச் சேர்ந்த பிரீத்தி பவார் ஒலிம்பிக்கில் தனது முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்கி உள்ளார். ரவுன்ட் 16 சுற்றில் வரும் செவ்வாய்க்கிழமை, 2ம் நிலை வீராங்கனையும், உலக சாம்பியன் ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றவருமான கொலம்பியாவின் மார்செலாயெனி அரியாசை எதிர்கொள்ள உள்ளார்.ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி பி பிரிவில், நியூசிலாந்துடன் மோதியது.
கடைசி வரை த்ரிங்காக நடந்த இந்தபோட்டியில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் நாளை மாலை அர்ஜென்டினாவுடன் இந்தியா மோதுகிறது.பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையரில் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் 21-8,22-20 என கவுதமாலாவின் கெவின் கோர்டானை வீழ்த்தினார். ஆடவர் இரட்டையரில் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, 21-17,21-14 என பிரான்ஸ் ஜோடியை வென்றது. 2வது நாளான இன்று துப்பாக்கிசுடுதல், பேட்மிண்டன், நீச்சல், வில்வித்தை போன்ற விளையாட்டுகளில்இந்திய வீரர்கள் களம் இறங்குகின்றனர். டேபிள்டென்னிஸ் தனிநபர் பிரிவில் மாலை 3 மணிக்கு சரத்கமல், நீச்சலில் தனிநபர் பிரிவில் ஹரி, தினிதி, டேபிள் டென்னிசில் மாலை 4.30 மணிக்கு மணிகா பத்ரா ,பேட்மிண்டனில் இரவு 8 மணிக்கு ஆடவர் ஒற்றையரில் பிரனாய் களம் காண்கின்றனர்.முதல் நாளில் ஆஸ்திரேலியா மகளிர் நீச்சல் போட்டியில் 2, சைக்கிள் ரேசில் மகளிர் பிரிவில் ஒரு தங்கம் என மொத்தம் 3 தங்கம், 2 வெள்ளி என 5 பதக்கம் வென்றது. சீனா 2 தங்கம், ஒரு வெண்கலம், அமெரிக்கா ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 5 பதக்கமும், பிரான்ஸ் ஒரு தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கமும் வென்றன.