சென்னையில் இருந்து 2 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள்

வார இறுதிநாட்களையொட்டி சென்னையில் இருந்து 2 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

சென்னை உள்பட பல்வேறு ஊர்களில் தங்கி கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் பணிபுரிபவர்கள் வார இறுதி நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள். இதனால் பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதுடன், பயணிகளும் கடும் சிரமங்களுக்கு ஆளாகின்றனர். இதனை தவிர்க்கும் பொருட்டு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.

அந்தவகையில் நாளையும், நாளை மறுநாளும் (ஜூலை 27, 28) வார இறுதி நாட்கள் என்பதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்கப்பட உள்ளன. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்றும், நாளையும் (ஜூலை 26, 27) 550 பேருந்துகள், சென்னை, கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 130 சிறப்பு பேருந்துகள், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 880 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இப்பேருந்துகளில் பயணிக்க
www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும், வார இறுதி நாட்களில் பயணிக்க சுமார் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை முன்பதிவு செய்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்புப் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.