கருமுட்டைகளின் தரத்தை டெஸ்ட்டில் தெரிந்துகொள்ள முடியுமா?
வயதாக, ஆக கருமுட்டைகளின் தரமானது குறையத் தொடங்கும். எங்களுடைய அனுபவத்தில் அது 37 வயதிலிருந்து குறையத் தொடங்குவதைப் பார்க்கிறோம். அந்த வயதிலிருந்து முட்டைகளின் எண்ணிக்கையும்கூட வேகமாகக் குறையத் தொடங்கும்.
அரிதாகச் சிலருக்கு, பிறவியிலேயே கருமுட்டைகளின் இருப்பு குறைவாக இருக்கும். அவர்களுக்கு 25 – 26 வயதிலேயே கருமுட்டைகளின் தரம் குறைவதையும் பார்க்கிறோம். முட்டைகளின் தரம் எப்படியிருக்கிறது என்பதை யூகத்தின் அடிப்படையில் எல்லாம் சொல்லிவிட முடியாது. அந்த முட்டைகளை வெளியே எடுத்துப் பரிசோதித்தால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
ஐவிஎஃப் (IVF) சிகிச்சையில் முட்டைகளை வெளியே எடுக்க வேண்டியிருக்கும். அதை வெளியில் எடுத்து மைக்ராஸ்கோப்பில் வைத்துப் பார்க்கும்போது அதன் தரம் எப்படியிருக்கிறது என்பது தெரியும். அவற்றில் எந்த முட்டைக்கு கருத்தரிக்கும் தன்மை இருக்கும் என்பதை மருத்துவரால் ஓரளவு யூகிக்க முடியும். தரமான முட்டைகளை மட்டும் எடுத்து கருவாக்கும் முயற்சிக்குப் பயன்படுத்துவார்கள்.
திருமணமானதும் உடனே கர்ப்பம் தரிக்க வேண்டாம், அதைத் தள்ளிப்போட வேண்டும் என்ற எண்ணத்தில் மருத்துவ ஆலோசனைக்கு நிறைய பேர் வருவார்கள். அந்தப் பெண்களின் கருமுட்டை இருப்பை டெஸ்ட் செய்தால் அது மிகக் குறைவாக இருப்பது தெரியவரும். திருமணத்துக்குப் பிறகு கர்ப்பத்தைத் தள்ளிப்போட நினைக்கும் தம்பதியர், மருத்துவரை அணுகி, அடிப்படையான ஹெல்த் செக்கப் எல்லாவற்றையும் செய்துகொள்ள வேண்டும். கர்ப்பப்பையை ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். கருமுட்டை இருப்புக்கான டெஸ்ட்டையும் செய்ய வேண்டும். ‘ஆன்டிமுலேரியன் ஹார்மோன்’ (Anti-Mullerian Hormone ) அளவைப் பரிசோதிக்கும் ரத்தப் பரிசோதனையின் மூலம் கருமுட்டை இருப்பைத் தெரிந்துகொள்ளலாம். இன்னும் எத்தனை நாள்களுக்கு கர்ப்பத்தைத் தள்ளிப்போடலாம் என்ற தெளிவும் கிடைக்கும்.