நெல் மூட்டைகளை வெட்டவெளியில் வைக்கும்படி
வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகளை வெட்டவெளியில் வைக்கும்படி கூறியதால் விவசாயிகள் சாலை மறியல் ஈடுபட்டனர். அவர்களிடம் டிஎஸ்பி சமரசம் பேசினார். வேலூர் டோல்கேட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளது. இந்த விற்பனை கூடத்திற்கு வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, ஊசூர், சோழவரம், அரசம்பட்டு, பென்னாத்தூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள நெல், கேழ்வரகு, வேர்க்கடலை உள்ளட்டவற்றை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக வேலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நெல் மூட்டைகள் அதிகமாக வந்தாக தெரிகிறது. மேலும் விவசாயிகள் விற்பனை செய்த நெல்மூட்டைகள் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் உள்ள குடோனில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையில், இன்று காலை 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மூட்டைகளை விற்பனைக்காக வேலூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்தனர். அப்போது, அங்கிருந்த ஊழியர்கள் நெல் மூட்டைகள் குடோனில் இடமில்லை என்பதால், வெளியே இறக்கி வைக்குமாறு கூறியதாக தெரிகிறது. நெல் மூட்டைகளை வெளியே இறக்கி வைத்தால், பாதுகாப்பு இல்லை. திடீரென மழை வந்தால் அனைத்து நெல் மூட்டைகளும் நனைந்து வீணாகிவிடும். அவ்வாறு நெல் நனைந்து வீணாகி விட்டால் இதற்கு யார் பொறுப்பு என்று ஒழுங்கு முறை விற்பனை கூட ஊழியர்களிடம் விவசாயிகள் கேட்டனர். இதற்கு அவர்கள் சரியாக பதில் அளிக்கவில்லையாம். இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் வேலூர் அண்ணா சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு சம்பவ இடம் வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, விவசாயிகள் நாங்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை குடோனில் வைக்க அனுமதிக்க வேண்டும். ஏற்கனவே குடோனில் வைக்கப்பட்ட நெல் மூட்டைகளை வியாபாரிகள் எடுத்து செல்ல வேண்டும் என கூறினர். இதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக டிஎஸ்பி திருநாவுக்கரசு தெரிவித்தார். இதையேற்று விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை ஒழுங்குமுறை விற்பனை கூட குடோனில் வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது