சென்னையில் 4வது ரயில் முனையம்
சென்னையில் 4வது ரயில் முனையம் வில்லிவாக்கத்திற்கு பதிலாக பெரம்பூரில் அமைக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார். சென்னை சென்ட்ரல் பகுதியில் உள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்தில் ஒன்றிய பட்ஜெட்டில் ரயில்வே திட்டங்கள் குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார். தொடர்ந்து சென்னையில் நிருபர்களை சந்தித்த தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறியதாவது: தமிழகத்தில் ஏற்கனவே 10 புதிய ரயில்வே வழித்தட பணிகள் நடந்து வருகிறது.
திண்டிவனம் – திருவண்ணாமலை, திண்டிவனம் – நகரி, சென்னை – கடலூர் (வழி மாமல்லபுரம்), மதுரை – தூத்துக்குடி, மொரப்பூர் – தர்மபுரி ஆகிய வழித்தட திட்டங்கள் அனுமதிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. கடற்கரை முதல் எழும்பூர் வரை நான்காவது வழித்தட பணி செப்டம்பரில் முடிவடையும். எழும்பூர், சென்ட்ரல், கன்னியாகுமரி, தாம்பரம், கோவை, கும்பகோணம் ஆகிய ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் மூன்று ஆண்டுகளில் முடிவடையும் என்றும் இதில் எழும்பூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த ரூ.700 கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் -தனுஷ்கோடி திட்டத்திற்கு தான் அதிக நிலம் தேவைப்படுகிறது
மாநில அரசு வேண்டும் என்றே திட்டத்தை தாமதப்படுத்தவில்லை, சுற்றுச்சூழல் காரணங்களுக்காக அனுமதி மறுத்துள்ளது. நிலம் கையகப்படுத்துவது என்பது மிகவும் நீண்ட நாட்கள் எடுக்கக்கூடிய செயல்முறை, மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என கூற முடியாது. பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. எக்ஸ்பிரஸ், சூப்பர்பாஸ்ட் ரயில்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கூடுதலாக பொதுப்பெட்டிகள் சேர்க்கப்படும். 2 பொதுபெட்டிகள் உள்ள ரயில்களில் கூடுதலாக 2 பெட்டிகள் சேர்க்கப்படும். 6 முதல் 8 மாதங்களில் இவை செயல்படுத்தப்படும். சென்னை வில்லிவாக்கத்தில் நான்காவது ரயில் முனையம் அமைக்கும் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக பெரம்பூரில் நான்காவது ரயில் முனையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான திட்டமிடல் பணிகள் நடந்து வருகிறது. மொரப்பூர் -தர்மபுரி இடையிலான ரயில்வே திட்டம் 2027ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும். மேலும் தற்பொழுது ஒதுக்கப்பட்டுள்ள நிதி போக தேவையான நிதி அவ்வப்போது கேட்டு பெறப்படும். இவ்வாறு அவர் கூறினார்.✳️✳️