விஷச்சாராய சம்பவம் எதிரொலியாக

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் எதிரொலியாக 13 கள்ளச்சாராய வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் மெத்தனால் கலந்து சாராயத்தை குடித்து பெண்கள் உட்பட 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் கண்பார்வைகள் இழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த அதிரடி நடவடிக்கையால் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் கண்காணிப்பாளர் அதிரடியாக மாற்றப்பட்டனர்.

மேலும், தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் புதிய சட்டத்திருத்தத்தையும் முதல்வர் கொண்டு வந்தார். அதன்படி இனி கள்ளச்சாராயம் குடித்து யாரேனும் உயிரிழந்தால் சம்பந்தப்பட்ட சாராயத்தை விற்பனை செய்யும் நபர் மற்றும் காய்ச்சும் நபர்களுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் மதுவிலக்கிற்கு எதிராக சட்டம் கடுமையாக்கப்பட்டது.

இந்நிலையில் வடக்கு மண்டல ஐஜியாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக 10 மாவட்டங்களில் கள்ளச்சாராயம் வழக்கில் கைது செய்யப்பட்ட வியாபாரிகளின் 466 வங்கி கணக்குகள் முடக்கி வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் நடவடிக்கை எடுத்துள்ளார். அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 98 வியாபாரிகளின் வங்கி கணக்கு, குறைந்தபட்சமாக திருவள்ளூர் மாவட்டத்தில் 12 சாராய வியாபாரிகளின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவம் எதிரொலியாக இன்று 13 கள்ளச்சாராய வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அதோடு இல்லாமல் கள்ளச்சாராய வியாபாரிகளின் அசையா மற்றும் அசையும் சொத்துக்களின் முடக்க ஏதுவாக கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.