எம்.ஜி.ஆரின் சத்துணவு திட்டத்தில் 5 முட்டைகள்
எம்.ஜி.ஆரின் சத்துணவு திட்டத்தில் 5 முட்டைகள் வழங்கிய தி.மு.க அரசு; திமுக அறிக்கை
1982ஆம் ஆண்டில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அறிமுகப்படுத்திய திட்டம், பள்ளிக் குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்கும் திட்டம். எம்.ஜி.ஆர் ஆட்சி முடிந்து, குடியரசுத் தலைவர் ஆட்சியும் முடிந்து தமிழ்நாட்டில் 1989இல் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க வென்று முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக்கு வந்தார்.
அம்மா உணவுத் திட்டத்தை மூடிவிடும் தி.மு.க. ஆட்சி என்று இப்பொழுது சிலர் சொல்லித் திரிவதுபோல், அப்போதும் தி,மு,க சத்துணவுத் திட்டத்தை மூடிவிடும் என்று சிலர் சொன்னார்கள். மூடியே பழக்கப்பட்டவர்கள் அல்லவா . அதனால்தான் அப்படிச் சொன்னார்கள். ஆனால் தி.மு.க. அப்பொழுது சத்துணவு திட்டத்தில் 1989இல் இரண்டு வாரங்களுக்கு ஒரு முட்டை சேர்த்து சத்துணவு திட்டத்தைப் பள்ளிக் குழந்தைகளுக்குச் சத்தான திட்டமாக வழங்கியது. 1996இல் நான்காவது முறையாக முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையில் தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்தது. அந்தக் காலகட்டத்தில் சத்துணவுடன் குழந்தைகளுக்கு வாரம் 5 முட்டைகள் வழங்கி அத்திட்டத்திற்கு மேலும் சிறப்புச் சேர்த்தவர் கலைஞர்.
இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை விரிவு படுத்தியது தி.மு.க.
அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 27.7.2001 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி அரசுப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிட பழங்குடியின மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.இந்தத் திட்டம் பள்ளி மாணவ, மாணவியருக்கு மட்டுமல்லாமல் அவர்களின் குடும்பத்தாருக்கும் பயனளிக்கும் திட்டம் என தி.மு.க கருதியது. அதனால், அ.தி.மு.க கொண்டு வந்த திட்டம் என எண்ணாமல் 2006இல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. 2006-2007 முதல் 5 ஆண்டுகளிலும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் ஆதிதிராவிடர்- தாழ்த்தப்பட்டோர் மலைவாழ் இனத்தினர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் உட்பட இதர பல வகுப்புகளைச் சார்ந்தவர்களுக்கும் விரிவுபடுத்தி 19 இலட்சத்து 54 ஆயிரத்து 627 மாணவ மாணவியர்க்கு 465 கோடியே 91 லட்சம் ரூபாய்ச் செலவில் இலவச மிதி வண்டிகள் வழங்கப்பட்டன என்பது வரலாறு.