ராகுல் காந்தி எம்.பி பேச்சு. விவசாயிகளின் பக்கம் தான் நான்.

ராகுல் காந்தி எம்.பி பேச்சு,. விவசாயிகளின் பக்கம் தான் நான் இருக்கப் போகிறேன்

புதுடெல்லி,

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் 2 மாதங்களாக போராடி வருகின்றனர்.

இதில் ஈடுபட்டிருந்த சுமார் 41 அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் 11 சுற்று பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு நடத்தியது. ஆனால் அவை பலனளிக்காததால் போராட்டம் நீடித்து வருகிறது.

இந்த போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில் விவசாயிகள் நேற்று முன்தினம் டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்தினர். நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1 லட்சம் டிராக்டர்களில் லட்சக்கணக்கான விவசாயிகள் பேரணியாக டெல்லிக்குள் நுழைந்தனர்.

போலீசார் அனுமதிக்காத நேரத்தில், அனுமதிக்காத தடத்தில் பேரணி நடந்ததால், போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக உருவெடுத்தது. இதில் பல வாகனங்கள், தடுப்பு வேலிகள் என ஏராளமான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. போலீசார் மற்றும் விவசாயிகள் தரப்பில் பலர் காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை அடித்து விரட்டினர். இதற்கு மத்தியிலும் விவசாயிகள் செங்கோட்டைக்குள் புகுந்து அங்கு மத கொடி ஒன்றை ஏற்றினர். இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

இந்த வன்முறை சம்பவம் விவசாய அமைப்புகளிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றன. எனவே இந்த போராட்டத்தை வாபஸ் பெற 2 சங்கங்கள் முடிவு செய்துள்ளன. 

இதனிடையே நாங்கள் போராட்ட களத்தைவிட்டு  காலி செய்ய மாட்டோம் என்று காஜிப்பூர் எல்லையில் பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஒரு பக்கத்தை தேர்வு செய்ய வேண்டிய நேரம் இது. எனது முடிவு தெளிவாக உள்ளது. நான் ஜனநாயகத்துடன்  இருக்கப்போகிறேன். அமைதியான வழியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் பக்கம் தான் நான் இருக்கப்போகிறேன் என ராகுல்காந்தி எம்.பி., டுவிட்டரில் இந்தியில் பதிவிட்டுள்ளார்.

செய்தியாளர் ரஹ்மான்

Leave a Reply

Your email address will not be published.