‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை

ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை தருமபுரி மாவட்டம் பாளையம்புதூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “பொதுமக்கள் என் மீதும், திமுக மீதும் நம்பிக்கை வைத்து கேலி மனிதர்களை தோற்கடித்து தேர்தலில் பெரிய வெற்றியை தேடித்தந்தீர்கள். ஆட்சிக்கு வந்ததும் பொதுமக்களின் குறைகளை தீர்க்க புதிய துறையை ஏற்படுத்தினேன். மக்கள் வைத்த கோரிக்கைகளில் சாத்தியமுள்ள அனைத்தையும் நிறைவேற்றியுள்ளோம். தேர்தலுக்கு முன்பே பொதுமக்களின் தேவைகள், கோரிக்கைகளை மனுக்களாக பெற்றோம். பொதுமக்களிடம் தொடர்ந்து மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறோம்..மக்கள் தரும் எல்லா மனுக்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தோம்.தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்களின் 72,438 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

மக்களின் கோரிக்கைகள் எந்த இடத்திலும் எங்களது பார்வையில் இருந்து தப்பிவிடக்கூடாது என்பதற்காக முதல்வரின் முகவரி துறை உருவாக்கம். 68.30 லட்சம் மனுக்களில் 66.25 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்களில் 2,29,216 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு
காணப்பட்டது. ரூ.51 கோடி மதிப்பில் அரூர் அரசு மருத்துவமனை உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். அரூர் பேரூராட்சி அரூர் நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். மஞ்சப்பள்ளி, ராஜபாளையம் அணைக்கட்டுகள் ரூ.5.5 கோடி செலவில் புணரமைக்கப்படும். சிட்லிங், அரசநத்தம் பகுதியில் பழங்குடியினர் உற்பத்தி செய்யும் -ராகி,சாமை, வரகுக்கு கிடங்கு அமைக்கப்படும்.

தருமபுரி வெண்ணாம்பட்டி ரயில்வே மேம்பாலம் ரூ.31 கோடி செலவில் மேம்படுத்தப்படும். பாளையம்புதூர் அரசு பள்ளியில் பழுதடைந்த நிலையில் உள்ள 4 வகுப்பறைகள் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். தீர்த்தமலையில் துணை வேளாண்மை விரிவாக்க மையம் அமைக்கப்படும். தமிழ்நாடு அரசு மக்களுக்காக செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பொறாமையையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் தொடர் தோல்வியடைந்த பிறகும் ஒன்றிய அரசு இன்னும் பாடம் கற்கவில்லை.தமிழ்நாட்டின் முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க அவர்களுக்கு மனமில்லை, நல்ல குணமில்லை. பாடம் கற்கவேண்டும் என்ற விருப்பமுமில்லை. இந்தியாவின் முதன்மை மாநிலமாக உள்ள தமிழ்நாட்டை உன்னதமான மாநிலமாக மாற்றுவோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.