அருள் ‘உடை’மை

இறைவனின் திருவடிவம் அருளாகும். அவனுடைய திருவுருவில் அணிந்திருக்கின்ற ஆடையும், புனைந்துள்ள மாலையும், கைகளில் ஏந்தியிருக்கின்ற மான், மழு, மூவிலைச் சூலமும் அருளின் வடிவேயாகும். ‘‘உரு அருள்… அரன்தன் கரசரணாதி சாங்கம் தரும் அருள்; உபாங்கம் எல்லாம்தான் அருள்’’ என்று சித்தாந்த சாத்திரங்கள் இறைவனின் அருள் திருமேனியை வர்ணிக்கின்றன.

‘‘காஷாய ஸம்வீத காத்ரம்
காமரோகாதி ஸம்ஹாரி பிக்ஷான்ன பாத்ரம்
காருண்ய ஸம் பூர்ண நேத்ரம்
சக்திஹஸ்தம் பவித்ரம் பஜே சம்புபுத்ரம்’’
‘‘காவி உடை தரித்த திருமேனியும், ஆசை முதலான நோய்களை அழிக்கும் பிட்சைப் பாத்திரமும், அருள் நிறைந்த கண்களும், வேல் ஏந்திய கையும் உடைய தூய்மையே வடிவானவரும் சிவபுத்ரருமான சுவாமிநாத சுவாமியை வணங்குவோம்’’ என்பது சுவாமிநாத அஷ்டகம்.

“காஷாய வஸ்த்ரம் கரதண்ட தாரிணம்
கமண்டலும் பத்ம கரேண சங்கம்
சக்ரம் கதா பூஷித பூஷணாட்யம்
ஸ்ரீபாதராஜம் சரணம் ப்ரபத்யே’’

‘‘காவி ஆடை தரித்தவரும், கையில் தண்டம் ஏந்தியவரும், கமண்டலம், தாமரை மலர், சங்கு, சக்ரம், கதை ஆகியவைகளைக் கரங்களில் ஏந்தியவருமான ஸ்ரீபாத ஸ்ரீவல்லப சுவாமியை சரணடைவோம்’’ என்பது ஸ்ரீபாத ஸ்ரீவல்லபரின் தியான ஸ்லோகம். இவ்விரண்டு ஸ்லோகங்களிலும், காஷாய ஸம்வீத காத்ரம் (காவி உடை திருமேனி), காஷாய வஸ்த்ரம் (காவி ஆடை தரித்தவர்) என்று அவர்களுடைய ஆடைகளும் அருள் மயமாய் வர்ணிக்கப்படுகின்றன.

கும்பகோணத்தில், ஸ்ரீ ராகவேந்திரர் தங்கியிருக்கும்பொழுது அவரைத் தரிசித்து ஆசி பெறுவதற்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவ்வாறு தரிசனம் செய்ய வந்தவர்களுள் மூன்று பேருக்கு மட்டும் ஒரு விபரீத ஆசை தோன்றியது. அதன்படி, அவர்கள் மூவரும் ஏதாவது ஒன்றை நினைத்துக் கொள்வதாகவும், அதை ஸ்ரீ ராகவேந்திரர் கண்டுபிடிக்கின்றாரா என்பதைப் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்தனர்.

எனவே, மூவரும் ஆளுக்கொன்றாக மூன்று இனிப்புகளை நினைத்துக்கொண்டு காவிரியில் நீராடச் சென்றனர். அப்பொழுது ஸ்ரீ ராகவேந்திரரின் வஸ்திரத்தைத் (ஆடையை) துவைப்பதற்கு ஸ்ரீராகவேந்திரரின் சீடரும் காவிரிக் கரைக்கு வந்தார். அந்த மூன்று பேர்களைக் கண்டவுடன் ‘சீக்கிரம் குளித்துவிட்டு ஸ்ரீமடம் வாருங்கள். ஸ்ரீ மூலராமர் பூஜையைக் காணுங்கள், பூஜை முடிந்ததும் நீங்கள் நினைத்த இனிப்புகளைச் சாப்பிடலாம்’ என்று சொன்னார்.

‘நாம் நினைத்ததை இவர் எப்படிச் சொல்கிறார்?’ என்று மூவரும் குழப்பமடைந்தனர். அதற்குள் அந்த சிஷ்யர், ஸ்ரீ ராகவேந்திரரின் வஸ்திரத்தை ஒரு கல்லில் வைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தார். அவரைப் பார்த்து, ‘எங்கள் மனத்தில் உள்ளதை எப்படி தெரிந்து கொண்டீர்கள்?’’ என்று கேட்டனர். ‘நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை’’ என்று சொன்னார். கல்லின் மீது வைத்திருந்த வஸ்திரத்தைத் துவைத்து எடுத்துக் கொண்டு போகும்பொழுது மீண்டும் அவர்களிடம், `ஸ்ரீ மடத்திற்கு வாருங்கள். நீங்கள் நினைத்தது கிடைக்கும்’ என்று சொல்லிவிட்டுப் போனார். மூவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

ஸ்ரீ ராகவேந்திரரின் வஸ்த்ரம் சிஷ்யரின் கையில் இருந்த போதுதான் அவர் இவ்வாறு பேசினார் என்றும், அது கையில் இல்லாத போது அவருக்கு எதுவும் தெரியவில்லை என்றும் முடிவு செய்தார்கள். அதனால், `குரு ஸ்ரீ ராகவேந்திரரின் வஸ்திரத்திற்கே இவ்வளவு மகிமை என்றால், குருவின் மகிமையை என்னவென்பது’ என்று பேசிக் கொண்டே ஸ்ரீ மடம் சென்றனர். அங்கு ஸ்ரீ மூலராமரின் பூஜையைக் கண்டு மகிழ்ந்தனர்.

மூலராமர் பூஜை முடிந்தபின், சாப்பிடும் பொழுது, ஸ்ரீ ராகவேந்திரர் அவர்களிடம் வந்து ‘நீங்கள் நினைத்தது எல்லாம் கிடைத்ததா?’ என்று கருணையோடு விசாரித்தார். மூவரும் கண்ணீர் மல்கி குருவின் திருவடிகளை வணங்கி நின்றனர். அப்போது அவர்களிடம், ‘நான் பிருந்தாவன பிரவேசம் ஆன பின்பு, எனது பிருந்தாவனத்தைப் பூஜிக்கும் பொறுப்பை உங்கள் மூவரின் பரம்பரைக்கே கொடுக்கிறேன்.

நீங்கள் விரும்பியபடி அனுதினமும் நைவேத்தியங்கள் செய்ய வேண்டும்’ என்று அருள்பாலித்தார். இப்பொழுது அவர்களின் பரம்பரையினர் விரும்பியபடியே நைவேத்தியங்களைப் படைத்து, பூஜையையும் குறைவில்லாமல் செய்துவருகின்றனர். இதன்மூலமாக, குருவின் வஸ்த்ரம் நாம் நினைத்ததை மட்டுமல்ல, அதற்கும் மேலான அருளையும் கொடுக்கும் என்பதை அறியலாம். ஸ்ரீ ராகவேந்திரரின் முந்தைய அவதாரமான ஸ்ரீ வியாசராஜரும், தன்னுடைய வஸ்திரத்தால் விஜயநகரத்தை ஆட்சிசெய்து கொண்டிருந்த கிருஷ்ண தேவராயருக்கு வந்த குஹூதோஷத்தை நீக்கினார் என்று அவருடைய வரலாற்றுக் குறிப்புகளில் காணக் கிடைக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.