சீமான் வலியுறுத்தல்
கம்பம் அரசு மருத்துவமனை புதிய கட்டிடம் இடிந்து விழுந்த விபத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த பேறுகால மற்றும் பச்சிளங் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் மதுரை ஊமச்சிகுளத்தைச் சேர்ந்த கட்டிடத்தொழிலாளர் நம்பிராஜன் உயிரிழந்ததோடு, மேலும் இரண்டு தொழிலாளர்கள் படுகாயமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்த தம்பி நம்பிராஜன் குடும்பத்திற்கு என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
கடந்த ஓராண்டாகக் கட்டப்பட்டு வரும் கம்பம் மருத்துவமனைக் கட்டிடம் விரைவில் திறக்கப்படவிருந்த நிலையில் மேல்தள தூண் இடிந்து விழுந்து விபத்து நிகழ்ந்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பச்சிளம் குழந்தைகளுக்கான மருத்துவமனை திறக்கப்பட்ட பிறகு இப்படியொரு விபத்து நிகழ்ந்திருந்தால் எத்தகைய பேரிழப்பைச் சந்திக்க நேர்ந்திருக்கும் என்பதை நினைத்துப்பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது
மருத்துவமனை கட்டுமானத்தில் அதுவும் பச்சிளங்குழந்தைகளுக்கான மருத்துவமனை கட்டுமானத்தைக் கூட தரமற்றதாக கட்டும் சிறிதும் பொறுப்பற்ற நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு எப்படி ஒப்பந்தம் வழங்கியது? குழந்தைகளுக்கோ, பொதுமக்களுக்கோ, மருத்துவர், செவிலியர்களுக்கோ ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அரசு பொறுப்பேற்குமா? அவர்களின் உயிரைத்தான் திமுக அரசால் மீட்டுத்தர முடியுமா? மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் நோக்கத்தில் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் தலையீட்டில் தகுதியற்ற நிறுவனத்திற்கு முறைகேடாக ஒப்பந்தம் வழங்கப்படுவதால்தான் இதுபோன்ற தரமற்ற கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு உடனடியாக கம்பம் மருத்துவமனை புதிய கட்டிடத்தை முழுமையாக ஆய்வு செய்வதோடு, தரமற்ற மருத்துவமனை கட்டிடத்தை எக்காரணம் கொண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரக்கூடாது. மேலும், கட்டிட ஒப்பந்தத்தை ரத்துச் செய்து, தரமற்ற மருத்துவமனை கட்டிடம் கட்ட காரணமானவர்களையும், அதனை அனுமதித்த அதிகாரிகளையும் கைது செய்து, அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் அரசு சார்பாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனைகள், பள்ளிகள், குடியிருப்புகள், அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் அனைத்தும் தரமானதாகக் கட்டப்படுகிறதா என்பதை முழுமையாக ஆய்வு செய்யவும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற தரமற்ற கட்டிடங்கள் கட்ட எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாதெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
உயிரிழந்த தம்பி நம்பிராஜன் குடும்பத்திற்கு உரிய துயர் துடைப்பு நிதி வழங்க வேண்டுமெனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்.