விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
இந்தியா, ரஷ்யா இடையேயான 22வது வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் மாஸ்கோ சென்றடைந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், அதிபர் புடின் இரவு விருந்தளித்தார். இந்நிலையில், பயணத்தின் 2ம் நாளான நேற்று மாநாட்டின் முக்கிய நிகழ்வாக பிரதமர் மோடி, அதிபர் புடின் பங்கேற்ற உச்சி மாநாடு நடந்தது. அப்போது, ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் அனைத்து இந்தியர்களையும் விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிபர் புடின் பிரதமர் மோடியிடம் உறுதி அளித்துள்ளார். தொடர்நது, அதிபர் மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ரஷ்யாவின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆப் செயின்ட் ஆண்ட்ரூ’ விருதை பிரதமர் மோடிக்கு அதிபர் புடின் வழங்கி கவுரவித்தார்.
இதையடுத்து, ரஷ்ய பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி தனி விமானம் மூலம் ஆஸ்திரியாவிற்கு சென்றார். அந்நாட்டின் தலைநகர் வியன்னாவில் ஆஸ்திரியாவின் பிரதமர் கார்ல் நெஹமரை மோடி சந்தித்து பேசினார். முன்னதாக அங்குள்ள இந்திய வம்சாவளியினர் வந்தே மாதரம் பாடலை இசையமைத்தபடி மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, “பிரதமர் கார்ல் நெஹமரின், அன்பான வரவேற்புக்கு நன்றி. நாளையும் நமது விவாதங்களை எதிர்நோக்குகிறேன். மேலும் உலக நன்மைக்காக நமது நாடுகள் தொடர்ந்து இணைந்து செயல்படும்” என்று கூறினார். 40 ஆண்டுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஆஸ்திரியா நாட்டிற்கு செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது