மெத்தனால் கலந்த விஷச்சாராயம்
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்த விவகாரத்தில் கள்ளக்குறிச்சி கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 229 பேர் சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் அரசு மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.இதில், அதிகளவில் பாதிக்கப்பட்ட 65 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுவரை 157 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
மேலும் 7 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மெத்தனால் கடத்துவதற்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான புதுவை மடுகரை மாதேஷ், கள்ளக்குறிச்சி பிரபல சாராய வியாபாரி கருணாபுரம் கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ் உள்பட 22 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் விசாரணை நடைபெற்றுவருகிறது. 7 பேர் தொடர்ந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இன்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவராமன் (41) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.