சிபிஐ விசாரணை கோரி
.பி.: ஹத்ராஸில் கூட்டநெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணை கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் புல்ராய் என்ற கிராமம் உள்ளது. இங்கு நாராயண் சாகர் விஷ்வ ஹரி என்கிற போலே பாபா எனும் சாமியாரின் மடம் அமைந்துள்ளது. அனைத்து மக்களாலும் போலே பாபா என்று அழைக்கப்படும் அவரது மடத்தில் அனைத்து மதத்தினரும் பங்கேற்கும் மனிதநேய மங்கள சந்திப்பு என்ற பெயரில் நேற்று சொற்பொழிவு நடைபெற்றது.
இதில், ஹத்ராசை சுற்றியுள்ள மாவட்டங்களின் கிராமவாசிகள் ஆயிரக்கணக்கில் வந்து கலந்து கொண்டனர். சுமார் 1.25லட்சத்திற்கு மேல் பக்தர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டம் முடிந்து பக்தர்கள் வெளியேறியபோது நெரிசல் ஏற்பட்டது. தள்ளுமுள்ளு காரணமாக ஒருவர் மீது ஒருவர் விழத் துவங்கியுள்ளனர். இதனால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டு வெளியேறும் வழி தெரியாமல் பலரும் மயங்கி விழுந்துள்ளனர். மயங்கிய பலர் அதே இடத்தில் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்.
ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளது. ஹத்ராஸில் கூட்டநெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணை கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கவுரவ் துவிவேதி பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இதனிடையே ஹத்ராஸ் உயிரிழப்புகள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதியின் கண்காணிப்பில் கமிட்டி அமைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்துள்ளது.