அமைச்சர் சாமிநாதன் தகவல்

பத்திரிக்கையாளர்களுக்கு இலவச பஸ் பாஸ்: அமைச்சர் சாமிநாதன் தகவல்

தமிழகத்தில் செய்தித்துறை அமைச்சராக இருக்கும் மு.பெ.சாமிநாதன் தலைமையில் பத்திரிகையாளர்கள் நலனிற்கு பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2 முக்கியமான கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்திருக்கிறார். இதில் மக்கள்தொடர்பு மற்றும் பஸ் பயணச் சலுகை ஆகிய விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது,

கேள்வி :
செய்தி மக்கள் தொடர்புத் துறையில் பணிபுரியும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் அரசின் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம கருத்து கேட்கும் நிகழ்ச்சி ஏதும் நடத்தப்படுகிறதா என அறிய விரும்புகிறேன்.

பதில் :
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பத்திரிக்கையாளர்களுடன் பொது மக்களை மாதந்தோறும் நேரில் சென்று சந்தித்து, அரசின் நலத்திட்டங்கள் மூலம் பயன் பெற்றவர்களிடம், அதன் பயன்கள் பற்றிய விவரங்கள் அறிந்து வருகிறார்கள்.

இந்நிகழ்விற்கு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் “நிறைந்த மனம்” என்ற தலைப்பில் நிகழ்ச்சியை நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பத்திரிகையாளர்களுக்கு பஸ் பயண அட்டை சலுகை வழங்கப்படுவது பற்றி?

நடப்பாண்டில், அங்கீகார அட்டை (Accreditation Card) பெற்றுள்ள பத்திரிகையாளர்களுக்கு அரசுப் போக்குவரத்துக் கழக பஸ்களில் தலைமையிட பத்திரிகையாளர்கள் பயணம் செய்திட 457 எண்ணிக்கையிலும், பிற மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் 2,917 எண்ணிக்கையிலும் ஆக மொத்தம் 3,374 கட்டணமில்லாப் பஸ் பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

செய்தியாளர் அட்டை (Press Pass) பெற்றுள்ள பருவ இதழ்கள் / கால முறை இதழ்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்கு பஸ் பயண அட்டை சலுகை வழங்குவது தொடர்பாக முதல்-அமைச்சரின் மேலான கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே விரைவில் பருவ இதழ்கள், கால முறை இதழ்களில் பணியாற்றுபவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.