அரவிந்த் சாமி
நடிகன் என்ற ஸ்டார் அந்தஸ்து வந்த பின்னர், எனக்கு இந்த அந்தஸ்து எல்லாம் தேவையற்றது என்று விலகி செல்ல முடியுமா? சினிமாவில் ஸ்டார் அந்தஸ்து என்பது அரசியல்வாதிகளின் நாற்காலி ஆசை போன்றது. அது ஒரு போதை, அதை அனுபவித்தால் மேலும், மேலும் வேண்டுமென்ற ஆசை ஏற்படும் அளவிற்கு புகழ் போதை ஒரு மனிதனை ஆட்கொண்டுவிடும். இவ்வளவும் கிடைத்த போதிலும் அதை தூக்கி எறிந்துவிட்டு, தன் தந்தையின் நிறுவனத்தை இயக்க சென்றவர்தான் தற்போதைய ஈவில் நடிகர், அப்போதைய சாக்லேட் பாய் அரவிந்த் சாமி.இவர் நடிகனாக எவ்வளவு பெயர்களை சம்பாதித்தாரோ அதேபோல தொழிலும் சம்பாதித்துள்ளார் என்றே சொல்லலாம். அரவிந்த் சாமியின் தந்தை டெல்லி குமார். தத்து அப்பா வி.டி. சாமி என்பவர் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மெலட்டூர் என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் தொழில் தொடங்குவதற்காக சென்னைக்கு வந்தார். வி.டி. நிறுவனம் இரும்பு ஏற்றுமதியில் பிரசித்தி பெற்று விளங்கியது. மேலும் பல நிறுவனங்களுடன் கூட்டணி வைத்து தொழில் செய்தது. இதுபோன்ற குடும்பத்திலிருந்து வந்தவர் அரவிந்த் சாமி. என்னதான் அப்பா பணக்காரராக இருந்தாலும் கல்லூரி காலங்களில் பாக்கெட் மணி குறைவாகாதான் தருவாராம். காசு பற்றாக்குறையின் காரணமாகவே லயலோ கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே மாடலிங்கில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலமாகவேதான் மணிரத்தனத்திற்கு அறிமுகமாகி தளபதி படத்தில் கலெக்டராக நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ரோஜா படத்தில் நடித்தார். அதிலும் நல்ல பெயரை பெற்றார், மக்கள் மத்தியிலும் நன்கு பிரபலமாகத் தொடங்கினார். அதன்பின் மலையாளம், தெலுங்கிலும் கால்பதித்தார்.
லயோலா கல்லூரியில் பி.கொம் படித்தவர். அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள வேக் பாரஸ்ட் பல்கலைக்கழத்தில் சர்வதேச பிசினஸ் படித்து மாஸ்டர் பட்டம் பெற்றார். இதனைத்தொடர்ந்தும் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் 2000 ஆம் ஆண்டில் அலைபாயுதே படத்தில் கெஸ்ட் கதைப்பாத்திரம் நடித்துவிட்டு வெள்ளித்திரைக்கு விடைகொடுத்தார். எங்கே சென்றார் என்று தமிழகமே வலைவீசி தேடிக்கொண்டிருக்கையில், அவரது அப்பா நிறுவனத்தின் இயக்குனராக செயல்பட்டுக்கொண்டிருந்தார். இதுமட்டுமல்லாமல், பன்னாட்டு வர்த்தகத்திலும், கட்டடக்கலை சார்ந்த வணிகத்திலும் ஈடுபட்டுள்ளார். ப்ரோ ரிலீஸ் என்ற நிறுவனத்தில் இயக்குனராகவும், இன்டெர்ப்ரோ என்ற நிறுவனத்தில் தலைவராகவும் செயல்பட்டுள்ளளார். பின்னர் தானே சொந்தமாக டேலண்ட் மக்சிமஸ் என்ற கன்சல்டன்சி நிறுவனத்தை நிறுவினார். இவருக்கு கீழ் 5000 பேர் வேலை பார்ப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இப்படி தொழிலிலும் பிரசித்தி பெற்று வந்தவருக்கு ஒரு விபத்தினால் முதுகு தண்டில் காயம் ஏற்பட்டது. இதனால் நான்கு வருடங்களை படுக்கையிலே கழித்தார். இதனால் அவரின் தோற்றமே மாறியது. கட்டுமஸ்தான அழகிய தோற்றத்தில் எல்லோரையும் கவர்ந்தவரின் உடல் குண்டானது. நிலைகுலைந்த தனிமையில் இருந்தவரை மீண்டும் நீ நடிக்க வா என்று கடல் படத்திற்காக அழைப்புவிடுத்தார் மணிரத்னம். அதனைத் தொடர்ந்து வந்த தனி ஒருவன், அரவிந்த் சாமிக்கான அந்த பழைய ஸ்டார் அந்தஸ்தை கொண்டுவந்துவிட்டது. அரவிந்த் சாமி எவ்வளவு சிறந்தவரோ, அதை விட வணிகத்தில் சிறந்தவர் என்ற பெயரை சம்பாதித்துவிட்டார்.