ரேங்க் பட்டியலில் நீடிக்கும் குழப்பங்கள்
ரேங்க் பட்டியலில் நீடிக்கும் குழப்பங்கள்.. மே 5ல் நடந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு.
நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். தேசிய அளவிலான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நடந்தது. தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ) தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்-இளநிலை 2024) முடிவுகளை ஜூன் 4ம் தேதி வெளியிட்டது. அதில், தமிழகத்தைச் சோ்ந்த 8 மாணவா்கள் உள்பட நாடு முழுவதும் 67 போ் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா். இந்த நிலையில், நீட் நுழைவு தேர்வில் முதலிடம் பிடித்த 67 மாணவர்களில் 6 பேரின் பதிவெண்கள் அடுத்தடுத்து உள்ளதால் சக மாணவர்கள் சந்தேகிக்கின்றனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த ராஜஸ்தானில் இருந்து மட்டும் 11 பேர் முதலிடம் பெற்றிருப்பதும் சர்ச்சையை கிளப்பியது.
மேலும் இரண்டாமிடம், மூன்றாமிடங்களை பிடித்த மாணவர்களுக்கு 718, 719 மதிப்பெண்கள் எடுத்துள்ளதாலும் குழப்பம் நிலவுகிறது. நீட் தேர்வில் ஒரு கேள்விக்கு தவறாக விடையளித்தால் நெகட்டிவ் மதிப்பெண்கள் உள்பட 5 மதிப்பெண்கள் கழித்து 715 மதிப்பெண்கள் தான் கிடைக்கும். ஆனால் கருணை மதிப்பெண் அளித்ததாக தேசிய தேர்வு முகமை கூறும் விளக்கம் ஏற்புடையதாக இல்லை என சக மாணவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நீட் தேர்வை மீண்டும் நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மே 5ம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வை நடத்த வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே வினாத்தாள் லீக்கான விவகாரத்தால் நேர்மையாக படித்து உழைத்து தேர்வு எழுதிய மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதே அனைவரின் கவலையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.