ஒடிசா முதலமைச்சர் பதவியை ராஜினாமா

ஒடிசா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் நவீன் பட்நாயக்..அடுத்த முதல்வராக தர்மேந்திர பிரதான் தேர்வு செய்யப்பட வாய்ப்பு

 ஒடிசா மாநில முதலமைச்சர் பதவியை நவீன் பட்நாயக் ராஜினாமா செய்தார்.ஒடிசா மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 147 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஆளும் பிஜூ ஜனதா தளத்தை எதிர்த்து பாஜ, காங்கிரஸ் கட்சிகள் தனித்து போட்டியிட்டன. சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.இதில், ஆளும் பிஜூ ஜனதா தளம் 51 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது. ஆட்சி அமைக்க 74 தொகுதிகள் தேவை என்ற நிலையில், பாஜ 78 தொகுதிகளை கைப்பற்றி முதல் முறையாக அம்மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம், நவீன் பட்நாயக் 6வது முறையாக முதல்வராகும் கனவு தகர்ந்தது. அவர் 2000 ஆண்டு முதல் தொடர்ச்சியாக 5 முறை சட்டப்பேரவை தேர்தலில் வென்று முதல்வராக இருந்துள்ளார்.

24 ஆண்டுக்கு மேலாக முதல்வர் பதவியை வகித்துள்ளார். இம்முறை 2 தொகுதிகளில் போட்டியிட்ட பட்நாயக் தனது பாரம்பரியமான ஹின்ஜிலியில் வென்ற நிலையில், கன்தாபன்சி தொகுதியில் பாஜ வேட்பாளர் லட்சுமண் பாகிடம் தோல்வியை சந்தித்தார். இதே போல பட்நாயக்கின் அமைச்சரவையில் இடம் பெற்ற 8 அமைச்சர்களும் தோல்வி அடைந்தனர். இந்த நிலையில், ஒடிசா மாநில முதலமைச்சர் பதவியை நவீன் பட்நாயக் ராஜினாமா செய்தார். புவனேஸ்வரில் ஆளுநர் ரகுபர் தாஸை நேரில் சந்தித்து நவீன் பட்நாயக் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதனிடையே ஒடிசாவின் அடுத்த முதல்-மந்திரியை தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கி உள்ளது. மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஒடிசாவின் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.