தஞ்சாவூர்-நாகை புறவழிச்சாலையில் குப்பைகள்

துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி தஞ்சாவூர்-நாகை புறவழிச்சாலையில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும்

தஞ்சாவூர்-நாகை புறவழிச்சாலையில் சாலையோரங்களில் அதிகளவில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குப்பைகளை கொட்டி தீவைத்து எரிப்பதை தடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.தஞ்சை-நாகை புறவழிச்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை பகுதியில் விளார் – நாஞ்சிக்கோட்டை இடையே வசிப்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள் தங்கள் கடைகளில் சேரும் குப்பைகள், காய்கறி கழிவுகள், மாமிச கழிவுகள், முட்டை ஓடுகள் ஆகியவற்றை பைபாஸ் சாலை அருகே இரவோடு இரவாக கொட்டி விட்டு சென்று விடுகின்றனர்.இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தஞ்சாவூர் மேலவஸ்தாசாவடியில் இருந்து, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், மன்னார்குடி, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், செல்வதற்காக பைபாஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலைக்கு அருகிலேயே பல்வேறு கிராமங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்காக அணுகு சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் நாஞ்சிக்கோட்டை மற்றும் விளார் பைபாஸ் சாலை அருகிலேயே அணுகு சாலைகள் உள்ளன. இந்த சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் மழைக்காலம் தொடங்கினால் தொற்று நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. அதேபோல் சில நேரங்களில் அங்கே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை தீ வைப்பதால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.

மேலும் அங்கு கொட்டப்பட்டுள்ள கோழி இறைச்சிகள் காற்றில் பறந்து வாகனங்களில் செல்வோர் மீது படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதேபோல் பாட்டில்களும் உடைக்கப்பட்டு கிடக்கின்றன. இதனால், அந்த சாலை வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் மூக்கை பிடித்துக்கொண்டு தான் செல்கின்றனர். எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.