பீகாரில் சோகம்: வெப்ப அலையில் சிக்கி 19 பேர் பலி.
இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது.
டெல்லி, உத்தர பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் 45 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இதனால் வெப்ப காற்று வீசுகிறது.
பீகாரின் செய்க்புரா என்ற இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் படித்துவந்த மாணவிகள் வெப்ப அலையால் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி வழங்கி, அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதேபோல், பெகுசாராய் என்ற இடத்திலும் மாணவிகள் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதற்கிடையே, வெப்ப அலையின் தாக்கம் காரணமாக பீகாரில் ஜூன் 8-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க முதல் மந்திரி நிதிஷ் குமார் உத்தரவிட்டார்.
இந்நிலையில், பீகாரில் வெப்ப அலை காரணமாக தேர்தல் அலுவலர் உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, வெப்ப அலையை சமாளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மதிய நேரத்தில் யாரும் அவசியம் இன்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என பீகார் அரசு அறிவுறுத்தியுள்ளது.
வெப்ப அலையால் டெல்லியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் ஒரு குடம் தண்ணீருக்காக அல்லோலப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வைரல் ஆகியுள்ளது.