நல்ல மருந்து! நாட்டு மருந்து! – தொடர் -13

 நம்ம நாட்டு மருந்து…! (13)

நாம் உண்ணும் உணவு பழக்க வழக்க முறைகளின் மாற்றத்தால் ஏற்படக்கூடிய மோசமான வாய்வுத்தொல்லை..! சிரிப்பதற்கு அல்ல…! சிந்திக்க வேண்டிய ஒன்று என்று கூறிய அவர் தொடர்ந்து கூறியதாவது..

 நம்மில் பலர் அவசர அவசரமாகச் சாப்பிடும்போது, அல்லது பேசிக்கொண்டே சாப்பிடும்போது, தொலைக்காட்சிப் பெட்டியில் டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடும் போது நம்மை அறியாமலேயே காற்றையும் விழுங்கிவிடுகிறோம்.

 இந்தக் காற்றில் குறிப்பிட்ட சதவீதம் இரைப்பையிலிருந்து ஏப்பமாக வெளியேறிவிடுகிறது.

 மீதி குடலுக்குச் சென்று ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது.

அடுத்ததாக, குடலில் உணவு ஜீரணமாகும் போது அங்கு இருக்கும் பாக்டீரியாக்கள் துணையுடன் பல வேதிமாற்றங்களை நிகழ்த்துவதால், ஹைட்ரஜன், கார்பன்-டை-ஆக்சைடு, நைட்ரஜன், ஆக்சிஜன், மீத்தேன் எனப் பலதரப்பட்ட வாயுக்கள் உற்பத்தியாகின்றன.

நாம் ஒவ்வொருவரும் தினமும் சுமார் 2 லிட்டர் வாயு உற்பத்தி செய்து வெளியேற்றி வருகிறோம்

 இது அப்படியே வெளியேறினால் இந்தப் பிரபஞ்சத்தின் சுற்றுச்சூழலே கெட்டு நாறி நாசமாகி விடும்.

எனவே, இது பெரும்பாலும் ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, சுவாசப் பாதை வழியாக வெளியேறுகிறது.

பொதுவாக நமது குடலில் 200 மி.லி. வாயுதான் இருக்கக்கூடும்.

இது வெளியேறுவது உடலுக்கு நன்மை தரும் விஷயம் தான்.

ஆனால், துர்நாற்றம் கொண்ட கெட்ட வாயு வெளியேறினால், உடலுக்குள் கோளாறு இருப்பதாகவே அர்த்தம்.

சாதாரணமாக வாயுக்கள் உருவாகும்போது கெட்ட நாற்றம் இருக்காது.

 ஆனால், குடலில் சில என்சைம்கள் பற்றாக்குறை ஏற்படும்போது, புரத உணவு சரியாகச் ஜீரணிக்கப்படுவதில்லை.

அப்போது அமோனியா, ஹைட்ரஜன் சல்ஃபைடு, மெர்காப்டான் போன்ற வாயுக்கள் உற்பத்தியாகி ஆசனவாய் வழியாக வெளியேறும்.

 அப்போதுதான் அக்கம் பக்கம் இருப்பவர்கள் திடுக்கிட்டுத் திகைத்து மூக்கைப் பிடிக்கும் துர்பாக்கிய நிலை உருவாகிறது.

பலருக்கு இந்த வாயு சத்தமில்லாமல் நைஸாக சொல்லிக்கொள்ளாமல் வெளியேறுகிறது.

சிலருக்குச் பயங்கர இடி வெடி சத்தத்துடன் ஆர்ப்பாட்டமாக அடங்க மறுத்து அத்துமீறி வெளியேறுகிறது.

பொதுவாக ஹைட்ரஜனும், மீத்தேனும் சரியான அளவில் ஆக்சிஜனுடன் கலந்தால் சைக்கிள் டியூப்பில் காற்று வெளியேறுவது போல் …. புஸ் என்ற சத்தம் மட்டுமே கேட்கும்.

இந்தக் கலவை அதிகமாகிவிட்டால் தான் இந்தப் பிரபஞ்சமே நடுங்கும் அளவு அணுகுண்டு வெடியைப் போன்ற வினோதமான பூலோகம் பீடமாக மாறிவிட்டது போன்ற சத்தம் கூடக் கேட்கலாம்.

நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் உணவு உண்ணும் பழக்க வழக்க முறை மாற்றத்தால்.

மலச்சிக்கல், குடல்புழுக்கள், அமீபியாசிஸ், பித்தப்பைக் கற்கள் போன்றவையும் கொடுமையான வாயு உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.

அதன் காரணியாக குடல் காசநோய், புற்றுநோய், கணைய நோய், கல்லீரல் நோய், குடலடைப்பு, குடல் எரிச்சல் நோய் (Irritable Bowel Syndrome) போன்றவற்றால் குடலியக்கம் தடைபடும்போது வாயு அதிகமாகலாம். பேதி மாத்திரைகள், ஆஸ்துமா மாத்திரைகள், ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் போன்றவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போதும் வாயுத் தொல்லை அதிகரிப்பது வழக்கம்

எனவே வாய்வு (கேஸ்) பல நோய்களுக்கு முக்கிய காரணியாக மாறிவிடுகிறது…என்று தனது பேட்டியை முடித்துக் கொண்டார்.

இந்தப் பேட்டி எங்களது பத்திரிக்கையில் வெளி வந்ததா..? என்று மட்டும் கேட்காதீர்கள்..!

ஏனென்றால் எங்களுக்கு மிகப்பெரிய ஒரு விளம்பரம் கிடைத்த காரணத்தால் அந்த பேட்டி குப்பையில் போடப்பட்டது.

என் முயற்சியும் உழைப்பும் வீணாகி போனது.

அந்த மருத்துவர் கூறியதைப் போல் இன்று தெருவுக்குத் தெரு கருத்தரிப்பு மையங்களும், குடல் நோய் மருத்துவ மையங்களும், மனநல மருத்துவர்களும் பல்கிப் பெருகி விட்டார்கள் என்பதே உண்மை..! இதை யாரும் மறுக்க முடியாது…!

இந்த உண்மை பதிவை உணர்ந்த பின்பாவது, நீங்கள் உங்கள் உணவு உண்ணும் முறையை மாற்றிக் கொள்ளுங்கள்.

உங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள்.

  நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட நமது பாரம்பரிய உணவை,உடல் கருதி, ஆரோக்கியத்திற்காக வேண்டி.. விரும்பி சாப்பிடுங்கள்.

நோய் வருமுன் காத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

அடுத்து நமது வீடுகளில் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் உயிர் சத்து நிறைந்த உணவுப் பொருள்களின் மகிமையை பார்ப்போம்.

நல்ல (உணவு) மருந்து…!

நம்ம நாட்டு (உணவு) மருந்து…!

தொகுப்பு:- சங்கரமூர்த்தி.. 7373141119

Leave a Reply

Your email address will not be published.