யூடியூபர் டி.டி.எஃப் வாசன் மீது ஜாமினில் வர முடியாத
யூடியூபர் டி.டி.எஃப் வாசன் மீது ஜாமினில் வர முடியாத பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. யூடியூபர் டி.டி.எஃப் வாசனுக்கு ஏற்கனவே வழக்கு ஒன்றில் 10 ஆண்டுகள் பைக் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 15ம் தேதி திருச்செந்தூருக்கு காரில் சென்ற டி.டி.எஃப் வாசன் செல்போன் பேசியபடி சென்றதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
குறிப்பாக காரை அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் செல்போனில் பேசிக்கொண்டு சென்று அதை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டதாகவும் மதுரை மாநகரை சேர்ந்த ஆயுதப்படை காவலர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் காவல் நிலையத்தில் பைக் ரேசரும், யூடியூபருமான டி.டி.எஃப் வாசன் மீது நேற்று 7 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இதற்காக அவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தார். இன்று காலை அவர் மருத்துவ பரிசோதனைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. மேலும் கூடுதலாக 308 என்ற பிரிவில் அவருக்கு வழக்குகள் சேர்க்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சேர்க்கப்பட்டிருந்த 7 பிரிவுகளும் பிணையில் வரக்கூடிய பிரிவு என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது 8வது பிரிவாக (308)சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பிரிவின் கீழ் ஒருவர் பிறருக்கு மரணம் உண்டாகும் என்ற தெளிவுடன் ஒரு காரியத்தை செய்தல் என்ற பிரிவு இதற்கு பிணை கிடையாது. எனவே அவர் மதுரை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லும் போது அவரை சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இன்னும் சிறிது நேரத்தில் மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு அவர் அழைத்து செல்லப்பட உள்ளார்.