கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
திருச்சி முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு:
திருச்சி முக்கொம்பில் இருந்து கொள்ளிடத்தில் இன்று 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இருந்தால் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி அணை திறக்கப்படும். தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் மிகவும் குறைவாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி 48.150 கன அடியாக உள்ளது. அணைக்கு 784 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 2,103 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர்வரத்தும் திருப்திகரமாக இல்லை. எனவே இந்தாண்டு குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ல் தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லை.
அதே நேரம் தென் மேற்கு பருவமழை இந்த ஆண்டு நன்றாக பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே ஜூலை மாதத்தில் மேட்டூர் அணை பாசனத்திற்கு திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் மேட்டூரில் இருந்து வரும் தண்ணீரை பிரித்து அனுப்ப, திருச்சி மாவட்டம் எலமனூர்-வாத்தலை இடையே முக்கொம்பு தடுப்பணை உள்ளது. இங்கிருந்து தான் காவிரியில் வரும் வெள்ளம் கொள்ளிடம் ஆற்றுக்கு பிரிகிறது. காவிரியின் குறுக்கே 595.30 மீட்டர் நீளத்துக்கு அமைந்துள்ள தடுப்பணை, அதிகபட்சமாக வினாடிக்கு 1,80,000 கன அடி நீரை வெளியேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.