முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா அவசர ஆலோசனை செய்து வருகிறார். முல்லைப்பெரியாறு அணைக்குக் கீழே புதிய அணை கட்ட கேரள அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை செய்வதற்கான ஆய்வு எல்லைகள் கோரி கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் கேரள அரசு விண்ணப்பித்தது. இந்நிலையில் இந்த விண்ணப்பம் வரும் 28ம் தேதி மதிப்பீட்டுக் குழுவின் பரிசீலனைக்காகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த புதிய அணை வண்டிப்பெரியாரிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள அணை கட்டப்பட்டு 128 ஆண்டுகள் ஆனதால் பாதுகாப்பு கருதி புதிய அணை கட்டவுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. புதிய அணை கட்டும் கேரள அரசின் முயற்சிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு தலைமைச் செயலர் ஷிவ்தாஸ் மீனா அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனாவுடன் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா சந்தித்து டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறார். தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.