சங்கராபுரம் பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் 100 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள தியாகராஜபுரம் கிராமத்தைச் சுற்றியுள்ள விவசாயிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர் நடவு செய்து நல்ல விளைச்சலுடன் அறுவடைக்கு தயாராகி இருந்தது. இந்நிலையில் சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரு தினங்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. மேலும் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்கள் முளைக்கத் தொடங்கியதால் விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.
தொடர்ந்து அப்பகுதியில் வருடா வருடம் இதுபோல பாதிப்புக்கு உள்ளாகி வருவதால் மழைநீர் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்பட வேண்டும் எனவும், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், கால்வாய்கள் முறையாக தூர்வாரப்பட்டால் வருடா வருடம் விவசாயிகள் இதுபோன்ற நஷ்டத்தை சந்திக்க நேரிடாது எனவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க கோரியும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமிழக
அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.