மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்பான்
கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை வீடியோவாக வெளியிட்ட விவகாரம் :
வெளிநாட்டில் பரிசோதனை செய்து தனக்குப் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வீடியோ மூலம் அறிவித்த யூடியூபர் இர்பானுக்கு விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அதற்கு மன்னிப்பு கோரியுள்ளார் யூடியூபர் இர்பான் .. யூடியூபில் உணவுகள் தொடர்பாக ஏராளமான வீடியோக்களைப் பதிவிட்டு பிரபலமானவர் இர்பான். இவருக்கு யூடியூப்பில் கிட்டத்தட்ட 39 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர். யூடியூப் மூலம் பல லட்சம் சம்பாதிக்கும் இவர், கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இர்பானின் மனைவி ஆலியா கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இர்பான் வெளியிட்ட யூடியூப் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் மிகவும் வைரலானது. அதில், துபாய்க்கு மனைவியை அழைத்துச் சென்று கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து தெரிந்து கொண்டதோடு அதனை தன் நண்பர்களுடன் இணைந்து கொண்டாடவும் செய்துள்ளார். பொதுவாக வெளிநாடுகளில் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிந்து கொள்வதற்காக ‘ஜென்டர் ரிவில்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.
அந்நிகழ்ச்சியில் குழந்தையின் பாலினம் குறித்து பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்படும். அதில் நீல நிறம் வந்தால் ஆண் குழந்தை, பிங்க் நிறம் வந்தால் பெண் குழந்தை என்றும் தெரிந்து கொள்வார்கள். ஆனால் இத்தகைய வழக்கம், இந்தியாவில் நடைமுறையில் இல்லை. மேலும், வயிற்றில் இருக்கும் குழந்தை, பிரசவமாகும் வரை வெளியில் சொல்லக் கூடாது என்பது நடைமுறை. இந்நிலையில் இர்பான் வெளியிட்ட அந்த வீடியோவில், தனக்கு பிறக்கவுள்ள குழந்தையின் பாலினம் குறித்து வீடியோவாக பதிவிட்டு அதை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்தியாவில் குழந்தையின் பாலினம் பற்றி கருவிலேயே அறிந்து கொள்வது, அதனை அறிவிப்பது சட்டப்படி குற்றம் என்பதால் இர்பானிடம் விளக்கம் கேட்டு வாட்ஸ் அப் மற்றும் இ மெயில் மூலம் அரசின் சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இதுகுறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. மேலும் இர்பான் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது. இதனிடையே வீடியோ விவகாரம் பெரியதாகியதால் நேற்று மாலையில் சமூக வலைத்தளத்திலிருந்து இர்பான் அந்த வீடியோவை நீக்கினார்.இந்த நிலையில், தன்னை தொடர்பு கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இர்பான் மன்னிப்பு கோரியுள்ளார். மன்னிப்பு கோரிய வீடியோவை இர்பான் வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.மன்னிப்பு கோரினாலும் சட்ட நடவடிக்கைகள் தொடரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.