சாக்கடை கலந்து துர்நாற்றம் எடுக்கும் அவலம்
மக்கள் பங்களிப்பு மூலம் புதுப்பிப்பு வீணாகிறது நெல்லை வேய்ந்தான்குளத்தில் சாக்கடை கலந்து துர்நாற்றம் எடுக்கும் அவலம்
நெல்லை புதிய பஸ்நிலையத்தை சுற்றி காணப்படும் வேய்ந்தான்குளத்தில் சாக்கடை கலந்து வருவதால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.நெல்லை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள வேய்ந்தான்குளம் சுமார் 80 ஏக்கர் கொண்ட குளமாகும். இதில் 20 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம், 6 ஏக்கரில் ஊரக வளர்ச்சி துறை மகளிர் திட்ட கட்டிடம் மற்றும் நெடுஞ்சாலை துறை பயணியர் விடுதி உள்ளிட்ட கட்டிடங்களால் தற்போது குளம் வெறும் 52 ஏக்கரில் காட்சியளிக்கிறது.
மீதம் உள்ள இடத்திலும் இரு பல்கலைக்கழக கட்டிடங்களை கட்ட முயற்சி மேற்கொண்டபோது, பொதுமக்களின் முயற்சி காரணமாக அத்திட்டம் கைவிடப்பட்டது. வேய்ந்தான்குளம் முன்பு பஞ்சாயத்து ஆளுகையில் இருந்தபோது, அரசு நிதி ஒதுக்கீடு இல்லாததால் பராமரிப்பு இன்றி காணப்பட்டது. இக்குளம் அதை சுற்றியுள்ள பகுதி மக்களின் நிலத்தடி நீர் ஆதாரமாக இன்று வரை உள்ளது.
இதனை தூர்வாரி சீரமைத்து பராமரிப்பு செய்யவேண்டியது அவசியம் என்பதை அப்போதைய அண்ணா பல்கலைக்கழக முதல்வர் டாக்டர் சக்திநாதன் உணர்ந்து, அதற்கென ஒரு அமைப்பை உருவாக்கி, அப்போதைய நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம் பேசி அனுமதி பெற்று தந்தார். அதை தொடர்ந்து வேய்ந்தான்குளம் பொதுமக்கள் பங்களிப்போடு தூர்வாரி சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள 14 குளங்களை, பராமரிப்பு வசதிக்காக நெல்லை மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் வேய்ந்தான்குளம் மற்றும் என்.ஜி.ஒ.காலனி பகுதியில் மூன்று குளங்களும் உள்ளடக்கமாக இருந்தது. இக்குளங்கள் அனைத்தும் மக்கள் பங்களிப்பு மூலம் தூர்வாரி சீரமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நெல்லை மாவட்ட கலெக்டராக விஷ்ணு இருந்த காலக்கட்டத்தில் சிஎஸ்ஆர் நிதி மூலம் வேய்ந்தான்குளத்தில் நீர் கொள்ளளவு 14.5 கன அடி அளவு உயர்த்திட நடவடிக்கை எடுத்தார். இதனால் மழை காலத்தில் பாதாளச்சாக்கடை நீர், குளத்திற்கு வருவதை அறிந்து தடுக்கப்பட்டதோடு, கழிவுநீர் இயற்கை முறையில் சுத்திகரிப்பு செய்யப்பட்டு பறவைகள் அதிகம் வர வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. குளத்தில் நீர் இருந்த காலத்தில் வெளிநாட்டு பறவைகள் அதிகம் வருவதை அப்பகுதி மக்கள் கண்டு கழித்தனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழை வேய்ந்தான்குளத்தை மட்டுமின்றி, அதன் சுற்றுப்புற பகுதிகளை புரட்டி போட்டது. இதன் காரணமாக நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளிவரும் இடத்தில் பாலம் அருகே பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு, அத்தண்ணீர் மழைநீர் வாறுகாலில் அதிகளவு கலந்து வருகிறது.
பெருமாள்புரம் ஆம்னி பஸ்நிலையம் இருந்த இடத்தின் அருகே ஒரு பாலமும் மூடப்பட்டுவிட்டதால், கழிவுநீர் செல்ல வழியின்றி, அனைத்தும் வேய்ந்தான்குளத்தை நிரப்பி வருகிறது.
இதனால் வேய்ந்தான்குளம் தண்ணீர் பச்சை நிறமாக காட்சியளிப்பதோடு, புதிய பேருந்து நிலையம் வரை பெருமாள்புரம் வரை குளத்து தண்ணீர் துர்நாற்றமும் வீசி வருகிறது. அப்பகுதியில் சாலையில் நடந்து செல்வோர் மூக்கை பிடித்து கொண்டு செல்ல வேண்டியதுள்ளது.
இப்போதைய சூழலில் குளத்து நீரை அப்புறப்படுத்தி மீண்டும் தூர்வாரி சீரமைத்து பராமரிப்பு செய்தால் மட்டுமே நிலத்தடி நீர் மாசடைதல் தடுக்க முடியும் என அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர். வேய்ந்தான்குளத்தில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலப்பது குறித்து நெல்லை மாநகராட்சி 41வது வார்டு கவுன்சிலர் சங்கீதா ராதாசங்கர் பலமுறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும், அதற்குரிய நடவடிக்கை இல்லை.
பாளை பெருமாள்புரம், என்ஜிஓ காலனி பகுதிகளில் சமீபகாலமாக 600 அடி வரை போர் போட்டும் தண்ணீர் இல்லாத சூழல் நிலவுகிறது. ஆழ்குழாய் கிணறு அமைப்பது பூமி வெப்பமயமாக காரணமாக இருப்பதாக சமீபகால ஆய்வு அறிக்கை கூறுகின்றன. எனவே நெல்லை வேய்ந்தான்குளம் உள்ளிட்ட மாநகரின் முக்கிய குளங்களை பராமரித்து காக்க வேண்டிய கட்டாயத்தில் பொதுமக்களும், அதிகாரிகளும் உள்ளனர்.
வேய்ந்தான்குளத்தில் பாதாள சாக்கடை கலப்பால் நிலத்தடி நீரும் மாசுபடும் அபாயம் உள்ளது. அதன் தொடர்ச்சியாக நோய் பரவவும் வழிவகை செய்கிறது. எனவே உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் குளத்திற்கு வரும் மழைநீர் கால்வாயை சீரமைத்தல், குளத்து நீரை இயற்கை முறை சுத்திகரிப்பு செய்தல், ஆங்காங்கே பாதாள சாக்கடை மேனுவல் உடைத்து கால்வாயில் விடுவதை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.