ராமதாஸ் வலியுறுத்தல்
மேட்டூர் அணையை திறக்க வாய்ப்பில்லை என்பதால் குறுவை தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும்:
மேட்டூர் அணையை திறக்க வாய்ப்பில்லை என்பதால் குறுவை தொகுப்புத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது, காவிரி பாசன மாவட்டங்களின் பாசன ஆதாரமாக திகழும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 42 அடியாகவும், நீர் இருப்பு 13 டி.எம்.சியாகவும் குறைந்து விட்டது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடிக்கும் கூடுதலாகவும், அணைக்கான நீர்வரத்து 15,000 கன அடிக்கும் கூடுதலாக இல்லாத நிலையில் , மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது சாத்தியமற்ற ஒன்றாகும். அதனால், நடப்பாண்டில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை.
அந்தமான நிகோபர் தீவுகளில் நேற்று தான் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் அமைந்துள்ள கேரளத்திலும், கர்நாடகத்திலும் தென்மேற்கு பருவமழை ஜூலை மாத இறுதியில் தான் தீவிரமடையும். எனவே, மேட்டூர் அணைக்கு தண்ணீர் வருவதாக இருந்தாலும் அது ஜூலை மாத இறுதி அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தான் சாத்தியமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு தான் மேட்டூர் அணையை ஆகஸ்ட் 15-ஆம் தேதி வாக்கில் திறக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வல்லுனர் குழு பரிந்துரைத்துள்ளது. அப்படியானால், குறுவை சாகுபடி செய்ய திட்டமிட்டிருக்கும் உழவர்களுக்கு மாற்றுவழி என்ன? என்பதை தமிழக அரசு காட்ட வேண்டும்.