பாரம்பரிய நெல்
முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்
திருத்துறைப்பூண்டி, மே 20: முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம் என்று இயற்கை வேளாண் பயிற்சியாளர் விளக்கம் அளித்துள்ளார்.இதுகுறித்து திருத்துறைப்பூண்டி இயற்கை வேளாண் பயிற்சியாளர் திருத்துறைப்பூண்டி பாலம் செந்தில்குமார் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்களை நம் முன்னோர்கள் பயன்படுத்தியதற்கான சான்றுகள் உள்ளன. முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் ஆதாரமே இந்த பாரம்பரிய நெல் ரகங்கள் ஆகும். நெல்லின் தன்மையையும், வளரும் விதத்தையும் பொருத்து நெல் வகைகள் பகுக்கப்பட்டிருந்தன. மறைந்து போன இந்த ரகங்களை நெல் ஜெயராமன் போன்றோர்கள் ஊர் ஊராக சென்று மீட்டு மறு உற்பத்தி செய்து பரவலாக்கம் செய்ததன் பயனாக தற்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான பாரம்பரிய நெல் ரகங்கள் பயிர் செய்யப்படுகிறது. சாகுபடியானது ஆடி பருவத்தில் நீண்டகால பயிராக விதைப்பார்கள். மூன்று மாதங்களுக்கு பிறகு தை மாதம் அறுவடை செய்து பொங்கல் வைப்பார்கள்.பழனி கோயில் செப்பேடுகளிலும், பழைமையான கோயில்களிலும் பொறிக்கப்பட்டுள்ள பாரம்பரிய நெல் ரகங்களின் பெயர்கள் அன்னமழகி, அறுபதாங்குறுவை, பூங்கார், கேரளா ரகம், குழியடிச்சான் (குழி வெடிச்சான்), குள்ளங்கார், மைசூர்மல்லி, குடவாழை, காட்டுயானம், காட்டுப்பொன்னி, வெள்ளைக்கார், மஞ்சள் பொன்னி, கருப்புச் சீரகச்சம்பா, கட்டிச்சம்பா, குருவிக்கார், வரப்புக் குடைஞ்சான், குறுவைக் களஞ்சியம், கம்பஞ்சம்பா, பொம்மி, காலா நமக், திருப்பதிசாரம், அனந்தனூர் சன்னம், பிசினி, வெள்ளைக் குருவிக்கார், விஷ்ணுபோகம், மொழிக்கருப்புச் சம்பா, காட்டுச் சம்பா, கருங்குறுவை, தேங்காய்ப்பூச்சம்பா, காட்டுக் குத்தாளம், சேலம் சம்பா, பாசுமதி, புழுதிச் சம்பா, பால் குடவாழை, வாசனை சீரகச்சம்பா,கொசுவக் குத்தாளை, இலுப்பைப்பூச்சம்பா, துளசிவாசம், சீரகச்சம்பா, சின்னப்பொன்னி, வெள்ளைப்பொன்னி, சிகப்புக் கவுனி, கொட்டாரச் சம்பா, சீரகச்சம்பா, கைவிரச்சம்பா, கந்தசாலா, பனங்காட்டுக் குடவாழை, சன்னச் சம்பா, இறவைப் பாண்டி, செம்பிளிச் சம்பா, நவரா, கருத்தக்கார், கிச்சிலிச் சம்பா, கைவரச் சம்பா, சேலம் சன்னா, தூயமல்லி, வாழைப்பூச் சம்பா, ஆற்காடு கிச்சலி, தங்கச்சம்பா, நீலச்சம்பா, மணல்வாரி, கருடன் சம்பா, கட்டைச் சம்பா, ஆத்தூர் கிச்சிலி, குந்தாவி,, சிகப்புக் குருவிக்கார், கூம்பாளை, வல்லரகன், பூவன் சம்பா, முற்றின சன்னம், சண்டிக்கார், கருப்புக் கவுனி, மாப்பிள்ளைச் சம்பா, மடுமுழுங்கி, ஒட்டடடையான், வாடன் சம்பா, சம்பா மோசனம், கண்டவாரிச் சம்பா, வெள்ளை மிளகுச் சம்பா, காடைக் கழுத்தான், நீலஞ்சம்பா, ஜவ்வாதுமலை நெல், வைகுண்டா, கப்பக்கார், கலியன் சம்பா, அடுக்கு நெல், செங்கார், ராஜமன்னார், முருகன் கார், சொர்ணவாரி, சூரக்குறுவை, வெள்ளைக்குடவாழை, சூரக்குறுவை, நொறுங்கன், பெருங்கார் என பொறிக்கப்பட்டள்ளது. தற்போது உணவில் கலக்கப்படும் ரசாயனங்களால் நோயும், ஆயுட் குறைவும் ஏற்பட்டு வருகிறது, இது போன்ற பாரம்பரிய அரிசிகளை உண்பதால் நோயை தடுக்கலாம். இதன் உற்பத்தியை அதிகரிக்க முடியும், இதன் முக்கியத்துவத்தை அறிந்து தமிழக அரசு வேளாண்துறை மூலம் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறது. அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட முன் வருவோம் என்றார்.