வறண்டுபோகும் கண்கள்
ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க வேண்டிய பிள்ளைகள், ஐ.டி போன்ற துறைகளில் எந்நேரமும் கம்ப்யூட்டர், லேப்டாப் உபயோகிப்பவர்களுக்கெல்லாம் `கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ (Computer Vision Syndrome) என்ற பிரச்னை பாதிப்பது அதிகரித்து வருகிறது.
தொடர்ந்து பல மணி நேரத்துக்கு கம்ப்யூட்டர், மொபைல் திரைகளைப் பார்த்துக்கொண்டிருப்பது கண்களை பாதிக்கும். கண்களில் எரிச்சல், சிவந்துபோவது, கண்களிலிருந்து நீர் வடிதல், தலைவலி, கண்கள் வறண்டு போவது போன்ற பிரச்னை களுடன் கண் மருத்துவர்களைச் சந்திக்க இன்று நிறைய பேர் வருகிறார்கள்.
ஆன்லைன் வகுப்புகளை கூடியவரையில் பெரிய திரை உள்ள கம்ப்யூட்டரில் அட்டெண்ட் செய்வது மாணவர்களுக்கு நல்லது. பெரிய திரை உள்ள கம்ப்யூட்டருக்கு வாய்ப்பில்லாத பட்சத்தில் லேப்டாப் உபயோகிக்கலாம். எக்காரணம் கொண்டும் மொபைல் போன் மட்டும் வேண்டாம். மொபைலில் பார்க்கும்போது கண்களுக்கு அது அதிக சிரமத்தைத் கொடுக்கும். கண்கள் களைப்படையும். அதனால் தலைவலி வரும். இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க, கம்ப்யூட்டர் பயன்படுத்தும்போது சில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும்.