எண்ணெய், நெய், வெண்ணெய்… அறவே தவிர்ப்பது ஆரோக்கியமானதா?
எண்ணெய், வெண்ணெய், நெய் போன்றவற்றின் உபயோகத்தை முடிந்தவரை குறைக்குமாறு அறிவுறுத்துகிறார்கள். இவற்றை அறவே தவிர்க்க வேண்டுமா..? எண்ணெய்க்குப் பதிலாக நெய், வெண்ணெய் பயன்படுத்தலாமா..?
மனித உடலுக்கு கொழுப்புச்சத்தும் அவசியம்தான். அதாவது, நல்ல கொழுப்புச்சத்து. அந்த வகையில் கொழுப்பை அறவே தவிர்ப்பது சரியானதல்ல. வளர்ந்த நபர் ஒரு நாளைக்கு 2000 கலோரிகள் உள்ள உணவு எடுத்துக்கொள்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதில் 25 முதல் 30 சதவிகிதம் நல்ல கொழுப்புச்சத்திலிருந்து பெறப்பட்டதாக இருக்க வேண்டும்.
நெய்யோ, வெண்ணெயோ எடுப்பதால், நாளொன்றுக்கு 2 டேபிள்ஸ்பூன் அளவுக்குமேல் போகாமல் பார்த்துக்கொள்ளவும். இதிலிருந்து 7 சதவிகித சாச்சுரேட்டடு கொழுப்பு (saturated fat) இந்த உணவுகளின் மூலம் கிடைக்கும். இந்த வகை கொழுப்பு ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்பதால் மிகக் குறைந்த அளவே எடுத்துக்கொள்ள வேண்டும்.
தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவம் நல்லதுதான். அதிலுள்ள மீடியம் செயின் ட்ரைகிளிசரைடு (Medium chain triglycerides) உங்கள் ஆரோக்கியத்துக்கு நல்லது. அது உடனடியாக உடலால் உட்கிரகிக்கப்படும். எந்த வகை கொழுப்பாக இருந்தாலும் அளவு மிகவும் முக்கியம். நல்ல கொழுப்புக்கும் இது பொருந்தும். ஆலிவ் ஆயில், கடலை எண்ணெய் போன்றவற்றில் உள்ள மோனோஅன்சாச்சுரேட்டடு கொழுப்பும் (Monounsaturated fat ), ஃபிளாக்ஸ் சீட்ஸ் எனப்படும் ஆளிவிதை, சியா சீட்ஸ் உள்ளிட்டவற்றில் உள்ள பாலிஅன்சாச்சுரேட்டடு கொழுப்பும் (Polyunsaturated fat) ஆரோக்கியமான கொழுப்புச்சத்தைக் கொண்டவை. எந்தக் கொழுப்பானாலும் மேற்குறிப்பிட்ட அளவைத் தாண்டாமல் கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.
நல்ல கொழுப்புச்சத்துள்ள எண்ணெய்களில், கடுகெண்ணெய்க்கு முக்கியமான இடம் உண்டு. ஆனால், தென்னிந்திய சமையலில் நாம் பெரும்பாலும் கடுகெண்ணெயை அவ்வளவாகப் பயன்படுத்துவதே இல்லை. கடுகெண்ணெயில் உள்ள நல்ல கொழுப்பு ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடுகெண்ணெய் பயன்பாடு அதிகம் உள்ளது. முக்கியமாக மீன், அசைவ உணவுகளைச் சமைக்க அவர்கள் கடுகெண்ணெயைப் பயன்படுத்துகிறார்கள். கடுகெண்ணெய்க்கென பிரத்யேக மணம் உண்டு. அது சிலருக்குப் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. ஆனாலும், ஆரோக்கிய கொழுப்புள்ளதால், அதை சமையலில் சேர்த்துக்கொள்வது நல்லது.
ஆரோக்கியமான நபர், ஒரு மாதத்துக்கு அரை லிட்டர் எண்ணெய் வரை பயன்படுத்தலாம். வெண்ணெய், நெய், மற்ற எண்ணெய்கள் என எல்லாம் சேர்ந்த கணக்கு இது. ஒவ்வொன்றிலும் அரை லிட்டர் எனப் புரிந்துகொள்ள வேண்டாம். இந்த அளவு தாண்டாதவரை, எந்த எண்ணெயாலும் அதிலுள்ள கொழுப்பாலும் பிரச்னை ஏற்படுவதில்லை.