மாணவர்கள் மேல் கல்விக்கு முயற்சித்து

புதுச்சேரியில் 10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் மேல் கல்விக்கு முயற்சித்து வருகின்றனர்.
புதுச்சேரி மேல் நிலைப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இட ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப குடியுரிமை, வருவாய், சாதி முதலான சான்றிதழ்கள் கேட்கப்படுகின்றன.
இது பற்றி எந்த விவரமும் தெரியாத 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களுடன் வருவாய் துறையின் கீழ் இயங்கும் வட்டாட்சியர் அலுவலகங்களில் காத்துக்கிடப்பது காலம் காலமாக திருத்த முடியாத செயலாக இருந்து வருகிறது.
அதற்காக முகாம்கள் நடத்தி சான்றிதழ்கள் வழங்கப் போவதாக வருவாய்த் துறையும், அதற்கு ஆதரவாக பள்ளிக் கல்வித் துறையும் செயல்பட்டன.
இந்த முகாம்கள் சங்கர வித்யாலயா பள்ளி, பாத்திமா பள்ளி, சின்னாத்தா பள்ளி, கதிர்காமம் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி, இமாகுலேட் பள்ளி போன்ற இடங்களில் நடந்தன.
கிராமப் புறங்களிலும் இது போன்ற முகாம்கள் நடத்தப்பட்டன. ஆனால், தாசில்தார் அலுவலகங்களில் காத்துக்கிடந்த அதே நிலைமைதான் முகாம்களிலும் நடந்தன.
முகாம்களுக்கு முன்கூட்டிய திட்டமிடல் செய்தார்களா என்ற கேள்வியை அவர்கள் முகாம்கள் நடத்திய விதங்கள் எடுத்துக்காட்டி உள்ளன.
மாணவர்கள், பெற்றோர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். நெருக்கடி தரும் வகையிலும் மன உளைச்சல் தரும் வகையிலும் பல்வேறு கேள்விகளால் மாணவர்கள் திண்டாடிப்போயினர்.
வாடகை வீடுகளை அடிக்கடி மாறி குடியிருப்போரிடம் வருவாய் துறை வி.ஏ.ஓ.க்கள் நடந்துகொண்ட விதம் மகா மட்டரகமானது. கணவர் வெளியூர் போயிருந்தார் என்றால், அது குறித்து கேட்கும் கேள்விகள் மானத்தை வாங்குவதாக இருந்தது.
பிள்ளைகள் வெளியூரில் படித்தாலும், பெற்றோர் வசிப்பிடம் புதுச்சேரியாக இருந்தால் அதற்கான ஆதாரம் இருந்தால் கண்ணை உடனடியாக சான்றிதழ் தர வேண்டிய பொறுப்பு வருவாய்த் துறைக்கு உள்ளது. அதற்கும் சரிபார்த்தபின்புதான் சான்றிதழ் தருவோம்.
2001க்கு முன்பு புதுச்சேரியில் வாழ்ந்தவரா, ஓ.பி.சி. என்பதற்கு என்ன சான்று இருக்கிறது, சாதி சங்கத்தில் போய் சான்றிதழ் வாங்கி வா, இரண்டு வீடுகள் மாறும்போது இடைப்பட்ட ஆறு மாதம் எங்கே வசித்தீர்கள் என சட்டப்படி கேள்வி கேட்பதாக நினைத்துக்கொண்டு, பெற்றோர்களை கொடுமைப்படுத்துகிறார்கள்.
சமூகம் என்ற அமைப்பு முறையில் இத்தனை சிக்கல்கள் இருக்குமா என தெரியாத மாணவர்கள், சாதி இல்லை என்று சொல்லித் தருகிறார்கள். ஆனால் சாதி சான்றிதழ் கேட்கிறார்கள். அதை வாங்க வந்தால் இப்படி அலைய விடுகிறார்கள். இந்த சமூகத்தில்தான் நாங்கள் எதிர்காலத்தில் வாழ வேண்டுமா என்ற கேள்விகளை முன்வைக்கிறார்கள்.
இது போன்ற செயல்களுக்கு வருவாய்த் துறையின் முறையற்ற, திட்டமிடாத இந்த முகாம்களே முழு பொறுப்பு. இதற்கு பொறுப்பேற்று அந்த துறையை நிர்வகிக்கும் கலெக்டர், உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் மாணவர்கள், பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
மேலும், இனி வரும் நாட்களில் கால தாமத்தை தவிர்த்து விரைந்து சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 25 முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கம்பன் கலையரங்கில் போடப்பட்ட முகாம்களில் அப்படித்தான் விரைவாக சான்றிதழ்கள் வழங்கினார்கள். எனவே அரசு தனது தோல்வியை ஒப்புக்கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அனிபால் கென்னடி
திமுக சட்டமன்ற உறுப்பினர்
உப்பளம் தொகுதி

Leave a Reply

Your email address will not be published.