உலகப் பாவை- தொடர் -21
21. பாலை சோலை ஆக
வேண்டும்
பாய்ந்துவரும் ஆறு தம்மைப் பாலையெலாம் பாய விட்டுக் காய்கனிகள் பயிர்கள் யாவும் கலகலக்கச் செய்ய வேண்டும்;
காய்ந்திருக்கும் நிலங்கள் எங்கும்
கடுமழையைப் பெய்ய வைத்துத் தாய்மையின் பெருக்கை நாற்றின்
தலைசாய்வில் காண வேண்டும்;
நோய்பிடித்து நைந்து நெஞ்சம் துடிக்கின்ற நிலங்கள் எல்லாம் வாய்விட்டுச் சிரிக்கு மாறு
வளம்பூக்க வைக்க வேண்டும்;
காய்க்காத நிலமே இல்லை கனவாம்இது நனவாய் மாற, வாய்க்கும்நல் வழிகள் காட்டி வலம்வருவாய் உலகப் பாவாய்!
பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு
நிறுவனர்
உலகத் திருக்குறள் மையம்