மங்கலங்களை வாரி வழங்கும் சிவராத்திரி
சிவராத்திரி என்று சொன்னால், சிவனுக்கு உரியராத்திரி என்று பொருள். சிவன் என்கிற சப்தத்துக்கு பல பொருள்கள் உண்டு. சிவன் என்றால், தமிழில் ‘‘சிவந்தவன்’’ என்று பொருள். வடமொழியில் சிவம் என்ற சொல்லுக்கு முழுமையானது, மங்கலகரமானது என்று பல பொருள்கள் உண்டு. முது முதல்வன், ஈர்ஞ்சடை அந்தணன், காரியுண்டிக் கடவுள், ஆலமர் கடவுள் என அனேகம் சிவப்பெயர்கள் சங்கநூல்களில் உள்ளன. எல்லா மங்கலங்களையும் வாரி வாரி வழங்கும் ராத்திரி சிவராத்திரி என்பதால் அதை மிக விசேஷமாகக் கொண்டாடுகின்றனர்.
எட்டுத் தொகை நூல்களுள் ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்னும் நான்கு தொகை நூல்களில் அமைந்த கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சிவபெருமானைப் பற்றியனவே ஆகும். இப்பாடல்களில், சிவபெருமானுடைய வடிவங்கள் சிறப்பாகப் பேசப் பெறுகின்றன. ஐங்குறுநூற்றில் உமாதேவியை ஒருபாகத்தில் கொண்ட நீலநிறம் வாய்ந்த திருமேனியை உடையவன் என்ற செய்தி, கடவுள் வாழ்த்துப் பாடலில் அமைந்துள்ளது. அகநானூற்றுப் பாடலில் ‘செவ்வான் அன்னமேனி’ என்றும், ‘நெற்றியில் இமையாத கண்ணை உடையவன்’ என்றும் கூறப் பெறுகிறது. புறநானூற்றுப் பாடலில் திருமுடியில் கொன்றை மாலை அணிந்தவன், கழுத்தில் கருப்பு நிறத்தை உடையவன் என்று குறிக்கப் பெறுகிறது.