தூக்குப்போட்டு தற்கொலை
கிறிஸ்தவ தேவாலய அறையில் பாதிரியார் தூக்குப்போட்டு தற்கொலை
வள்ளியூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலய அறையில் பாதிரியார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் புனித பாத்திமா அன்னை தேவாலயம் உள்ளது. இங்கு காஞ்சீபுரம் மாவட்டம் செயின்ட் தாமஸ் மவுண்ட் பகுதியை சேர்ந்த இருதயராஜ் மகன் ஆரோக்கிய தாஸ் (வயது 39) என்பவர் பாதிரியாராக பணியாற்றி வந்தார். கடந்த 4-ந் தேதி ஆலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கி நேற்று முன்தினம் முடிந்தது.
நேற்று ஆலயத்தில் வழக்கம் போல் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஆரோக்கியதாஸ் பங்கேற்கவில்லை. இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஆலய வளாகத்தில் பின்புறம் உள்ள அவரது அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது, அங்கு ஆரோக்கியதாஸ் மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வள்ளியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆரோக்கியதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த ஆலயத்தில் கடந்த ஓராண்டாக ஆரோக்கியதாஸ் பணியாற்றி வந்தார். அவர் பணிமாறுதலாகி நேற்று வேறொரு ஆலயத்திற்கு செல்வதாக இருந்தது. இதற்காக டிக்கெட் முன்பதிவும் செய்து இருந்தார்.
இதற்கிடையே நேற்று வழக்கம்போல் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அதில் அவர் பங்கேற்காமல் தூக்குப்போட்டு தற்கொைல செய்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர். எனினும் அவர் தற்கொலைக்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆலய திருவிழா முடிந்த நிலையில் பாதிரியார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வள்ளியூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.