ராஜபாளையம் அருகே பரபரப்பு
வேலையை விட்டு நிறுத்தியதால் காவலாளி ஆத்திரம் கண்மாயை குத்தகைக்கு எடுத்தவரின் கைகளை துண்டித்து கொடூர கொலை:
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தை சேர்ந்தவர் தர்மராஜ் (60). இன்ஜினியராக பணியாற்றியவர். தற்போது பொதுப்பணித்துறையின் ஆதியூர் கண்மாயை மீன்பிடி குத்தகைக்கு எடுத்துள்ளார். இந்த கண்மாயில் பச்சை காலனியை சேர்ந்த கார்த்தீஸ்வரன் (38), சம்மந்தபுரத்தை சேர்ந்த ஆனந்த் ஆகியோர் காவலாளியாக வேலை பார்த்து வந்தனர். கஞ்சா போதைக்கு அடிமையான கார்த்தீஸ்வரன் யாருக்கும் தெரியாமல் வெளியாட்களை மீன் பிடிக்க அனுமதித்து வந்ததாக தெரிகிறது.
இதையறிந்த தர்மராஜ், அவரை வேலையைவிட்டு நிறுத்தினார். அவருக்கு பதிலாக முகவூரை சேர்ந்த சமுத்திரம் என்பவரை காவலாளியாக வேலைக்கு சேர்த்தார். இதனால் கார்த்தீஸ்வரன் ஆத்திரத்தில் இருந்து வந்தார். தர்மராஜ் வழக்கம் போல நேற்று கண்மாய்க்கு வந்தார். ‘‘கண்மாய்க்குள் தார்ப்பாய் கிடக்கிறது, அதை எடுத்து வாருங்கள்’’ என சமுத்திரத்திடம் கூறிவிட்டு குடிசையில் அமர்ந்து டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அரிவாளுடன் அங்கு வந்த கார்த்தீஸ்வரன், ‘‘என்னையா வேலையை விட்டு நிறுத்துகிறாய்?’’ என கூறி தர்மராஜை சரமாரியாக வெட்டினார்.