பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலை
பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அரசுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது வன்முறை வெடித்ததில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியால் பணவீக்கம் காரணமாக அந்நாட்டு அரசு பொதுமக்கள் மீது அதிக வரி சுமத்தியுள்ளது. மேலும் கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்ததால் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிப்பு அடைந்துள்ளது
இந்நிலையில் கடும் விலைவாசி உயர்வை கண்டித்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் போராட்டத்தை கைவிடும்படி வலியுறுத்திய நிலையில் அவர்களிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதில் போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதனால் போராட்டக்களம் போர்க்களமாக மாறியது. இந்த வன்முறையின் போது பொதுமக்கள் தாக்குதலை அடுத்து போலீசார் போராட்டக்காரர்களை கலைத்தனர். மேலும் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அந்த பகுதியில் செல்போன் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டதுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.